ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அணி திரளும் உலக நாடுகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அணி திரளும் உலக நாடுகள்

கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹொங்கொங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரண்டுள்ளன.

இங்கிலாந்து தனது ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹொங்கொங்கை 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைத்தது. அதையடுத்து சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் தன்னாட்சி பிராந்தியமாக ஹொங்கொங் இருந்து வருகிறது. ஆனால் அதன் தன்னாட்சியை சின்னாபின்னமாக்குகிற வகையில் சீனா அடாவடி செய்கிறது. 

குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு கொடிய சட்டத்தை ஹொங்கொங்கில் கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து போராடுகிறவர்களை தனது நிர்வாகம் மூலம் ஒடுக்குகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக போராடிய சட்டசபை உறுப்பினர்களை சீன நிர்வாகம் பதவி நீக்கம் செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதில் இப்போது சீனாவுக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய உலக நாடுகள் அணி திரண்டுள்ளன.

இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹொங்கொங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தி உள்ளனர்.

சீனாவின் செயல்பாடுகள், சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஹொங்கொங் மக்களின் உரிமைகளை பலவீனப்படுத்துவதின் மூலம் விமர்சன குரல்களை சீனா ஒடுக்குவதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். 

ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றை காக்க மக்கள் தங்கள் நியாயமான கவலைகளை வெளிப்படுத்த உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

எனவே சீனா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஹொங்கொங் சட்டசபை உறுப்பினர்களை மீண்டும் தங்கள் கடமைகளை செய்யும் வகையில் மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர். ஹொங்கொங் விவகாரத்தில் உலக நாடுகள் கைகோர்ப்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment