சுய தனிமைப்படுத்தலிலுள்ளவர்களை கண்காணிக்க பொலிஸ் குழுக்கள் - முகக்கவசங்கள் அணியாதவர்களை அடையாளம் காண சிவிலில் பொலிஸார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 4, 2020

சுய தனிமைப்படுத்தலிலுள்ளவர்களை கண்காணிக்க பொலிஸ் குழுக்கள் - முகக்கவசங்கள் அணியாதவர்களை அடையாளம் காண சிவிலில் பொலிஸார்

(செ.தேன்மொழி)

மேல் மாகாணத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக 14 உதவி பொலிஸ் அத்தியச்சகர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசங்கள் அணியாதவர்களை அடையாளம் காணுவதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணம் முழுவதிலும், குளியாப்பிட்டி பகுதியில் ஐந்து பொலிஸ் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹேலியகொட பொலிஸ் பிரிவு மற்றும் குருநாகல் நகர சபைக்கு சொந்தமான பகுதிகளில் தொடந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுது.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் ஹேமாத்தகம, மாவனெல்ல, புலத்கோஹபிட்டி, கிரிவுள்ள ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் கலிகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாக கருதப்படும் 5715 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது இரண்டாம் கட்ட தொடர்பினை பேணியவர்கள் என்று கருதப்படும் 6199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நபர்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக 14 உதவி பொலிஸ் அத்தியச்சகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், வெளி நபர்கள் எவரும் அவர்களின் வீடுகளுக்கு செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் ஏதும் அவசியம் என்றால், அவர்களது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை ஒளடதம் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விநியோக நடவடிக்கைகளின் போது எந்தவித தடையும் இன்றி, அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad