தேசிய உற்பத்தியை ஊக்குவித்து, வறுமை நிலையை ஒழிக்கும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

தேசிய உற்பத்தியை ஊக்குவித்து, வறுமை நிலையை ஒழிக்கும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் வறுமை நிலையை ஒழிக்கும் வகையிலேயே வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் வறுமை நிலையை ஒழிக்கும் வகையிலே வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாகவே நான் காண்கின்றேன். வரலாற்று காலத்தை எடுத்துக் கொண்டால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருந்தன. 

ஆனால் அதற்கு பின்னரான அரசாங்கம் அதனை இல்லாம் செய்து, திறந்த பொருளாதார நிலைமையை கொண்டு வந்திருந்தது. இதனால் நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலைக்கு தொடர்ந்து முகம்கொடுத்துவர காணரமாகியுள்ளது. இவ்வாறான நிலையில் கொரோனா தொற்று காரணமாக எமது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 45 வருடங்களாக நாங்கள் எமது நாட்டுக்குள் செய்ய வேண்டிய உற்பத்திகளை செய்யாத காரணத்தினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. எமக்கு தேவையான 95 வீத உணவுகளை இங்கேயே உற்பத்தி செய்ய முடியும். இதன்படி இந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களை வரவேற்க வேண்டியுள்ளது. எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளும் விடயங்கள் இந்த அரசாங்கத்தின் திட்டங்களுக்குள் உள்ளன.

அத்துடன் நீண்ட கால பொருளாதார கொள்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளினாலேயே நாடு வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வரவு செலவு திட்டத்தின் பிரேரணைகள் வறுமையை முடிந்தளவுக்கு இல்லாமல் செய்வதற்கான திட்டமாகவே பார்க்கின்றேன். குறிப்பாக கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் தொடர்பான யோசனைகள் முக்கியமானவை. 

சகலருக்கும் நீர் விநியோகம் என்ற அரசாங்கத்தின் 3 வருட திட்டத்தை வரவேற்கின்றோம். குடிநீர் தொடர்பாக எதிர்காலத்தில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரத்தத்தை விடவும் குடிநீருக்கு பெறுமதி அதிகரிக்கும் நிலைமை ஏற்படலாம். இதனால் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் முக்கியமானவை.

பால் போத்தல் ஒன்றின் விலையைவிட குடிநீர் போத்தல் ஒன்றின் விலை அதிகமாகும். அதனால் இந்த வரவு செலவு திட்டம் முழுமையாக நாட்டில் வறுமை நிலைமையை ஒழிப்பதற்கான ஆரம்ப திட்டமாகவே இருக்கும். இதற்காக நாங்கள் ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad