மக்களுக்கு தேவையான சுவாசக் கருவிகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது, ஆனால் தாமரை மொட்டு தரப்பினரின் சுவாசக் கருவிகள் சிறப்பாக செயற்படுகின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

Breaking

Post Top Ad

Friday, November 20, 2020

மக்களுக்கு தேவையான சுவாசக் கருவிகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது, ஆனால் தாமரை மொட்டு தரப்பினரின் சுவாசக் கருவிகள் சிறப்பாக செயற்படுகின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் புஸ்வாணமாகியுள்ளதாகவும், அந்த வாக்குறுதிகளில் எதுவும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை யென்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தங்களுக்கு தேவையானவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் நிறைவேற்றிக் கொண்டதால், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்ற அக்கறை அவர்களிடத்தில் இல்லாது போய்விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அந்த விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றும் போது, ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவுக்கு வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன என்று ஆராய வேண்டும். 

அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவில் தீர்வு வழங்கப்பட்டுள்ளதா? எனவும் நிலையான அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டு செல்ல திட்டங்கள் உள்ளனவா? என்றும் ஆராய வேண்டும்.

பல்வேறு வாக்குறுதிகள், உறுதிமொழிகள் தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவும் வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மக்கள் நீதிமன்றத்தின் முன்னால் தேர்தல் விஞ்ஞாபனம் புஸ்வானமாகியுள்ளது.

மக்களுக்கு தேவையான சுவாசக் கருவிகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாமரை மொட்டு தரப்பினரின் சுவாசக் கருவிகள் சிறப்பாக செயற்படுகின்றது. பொய், ஏமாற்றுகள் மூலம் அவர்கள் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொண்டனர். 

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் வென்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றினர். இரட்டைப் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தினர். இனி அவர்களுக்கு மக்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரியென்றாகிவிட்டது. 

தற்போதைய நிலைமையில் வரவு செலவு திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் மக்களை வாழ வைக்க வேண்டிய வேலைத்திட்டம் இருக்க வேண்டும். 

வைரஸ் தொடர்பாக செலுத்த வேண்டிய கவனம் தொடர்பாக இந்த வரவு செலவு திட்டத்தில் ஒன்றும் இல்லை. ஏன் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கேட்கின்றோம்.

இந்த அரசாங்கத்திற்கு கொவிட் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற எந்த தேவையும் இல்லை. இவர்களுக்கு தேவையான அதிகாரம் இருப்பதால், தங்களுக்கு வேண்டியதை செய்துள்ளதால் கொவிட் ஒழிப்பு தொடர்பாக அக்கறை இல்லை. 

கொவிட் தடுப்புக்கான நடவடிக்கை என்ன? பரிசோதனை இயந்திரங்கள், உபகரணங்கள் தொடர்பாக பிரச்சினைக்கு தீர்வு என்ன? சுவாசக் கருவிகள் போதைமையை நிவர்த்தி செய்ய தீர்வு என்ன? என்பதனை குறிப்பிடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad