மலையக இளைஞர், யுவதிகளுக்கு தரிசு நிலங்களை பிரித்து வழங்க வேண்டும் - தேயிலையின் விலை அதிகரித்தாலும் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை : உதயகுமார் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 28, 2020

மலையக இளைஞர், யுவதிகளுக்கு தரிசு நிலங்களை பிரித்து வழங்க வேண்டும் - தேயிலையின் விலை அதிகரித்தாலும் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை : உதயகுமார்

”பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஹெக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும்.” - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நாடு உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதாரம் குறித்து அதிகூடிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் உரையாற்ற கிடைத்தமை பெருமதி வாய்ந்தது எனக் கருதுகிறேன்.

மிளகு, கருவா போன்ற சிறு உள்நாட்டு உற்பத்தி மூலம் ஆரம்பித்த நமது நாட்டிற்கு தேயிலை, இறப்பர், கோப்பி, தென்னை போன்றவை பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தமை யாராலும் மறுக்க முடியாது.

அதிலும் தேயிலை செய்கையின் பின்னர் நமது நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம் என்பவற்றை ஒருபோதும் மறக்க முடியாது.

இலங்கையில் வெறும் 19 ஹெக்டர் - நிலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை பின்னர் சுமார் 4 லட்சம் ஏக்டராக அதிகரித்து இன்றைய நிலையில் 2 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளது.

ஆரம்பத்தில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் பின்னர் அது படிப்படியாக குறைந்து சுமார் 200,000 பேர் நேரடி ஊழியர்களாக காணப்புவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் அண்மையில் பெருந்தோட்டத்துறை அமைச்சின் தகவல்படி, 23 பெருந்தோட்டக் கம்பனிகளிலும், கடந்த 2009ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 439 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில் தோய்வு ஏற்பட்டு 2018ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 445 ஆக குறைவடைந்துள்ளது.

குறிப்பாகக் கூறினால் கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொழிலாளர்கள் பெருந்தோட்ட தொழில் துறையில் இருந்து விலகியுள்ளனர்.

ஒரு காலத்தில் பெருந்தோட்டத் துறையில் அதிக தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்று மாறியுள்ளது.

இலங்கையில் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 72% பங்கினை சிறுதோட்ட உரிமையாளர்களும் 28 % பங்கினை பெருந்தோட்ட கம்பனிகளும் வகிக்கின்றன.

இன்றைய உலகில் தேயிலை உற்பத்தியில் முதலாவது நாடாக சீனாவும் 2வது நாடாக இந்தியாவும் 3வது நாடாக கென்யாவும் 4வது நாடாக நமது இலங்கையும் காணப்படுகின்றது.

அண்மைக் காலமாக இலங்கைத் தேயிலை உற்பத்தித்துறையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகிறது. ஒருபக்கம் உற்ப்பத்தி திறன் வீழ்ச்சி அடைந்துள்ளது. மறுபுறம் முறையான பராமரிப்பின்மையால் தேயிலை விளைநிலங்கள் பல காடாகிக் கிடக்கின்றது.

மற்றும் நவீன முகாமைத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது வீழச்சிக்கு பிரதான காரணம் என கூறப்படுவதோடு இந்த தேயிலை தொழில் துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் காரணமாகக் கருதப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இலங்கைக்கு சவால் விடுக்கும் கென்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெற்றி புதிய தொழிநுட்ப அறிமுகம், தொழிலாளர்கள் பராமரிப்பு போன்ற விடயங்களில் வெற்றி கண்டு உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

தேயிலை சந்தைப்படுத்துவதில் இன்று நிலவும் போட்டி, விளைச்சலில் காணப்படும் மந்த நிலை, தேயிலையின் தரம் குறித்ததான அதிருப்திக்கு மத்தியில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை மீள்கட்டியெழுப்புவது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட் கம்பனிகள். லாபம் வரும் போது அதனை மறைப்பதும் நட்டம் ஏற்படும் போது அதனை பகிரங்கப்படுத்தி தொழிலாளர் நலன்களை குறைக்கும் தந்திரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

தொழிலாளர்களின் நன்புரி விடயங்கள் மற்றும் சம்பள உயர்வு விடயங்களைப் பற்றி பேசும் போது மாத்திரம் கம்பனிகள் நட்டம் அடைவது எப்படி என்ற வித்தை புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் தொழிலாளர்கள் அப்படி அல்ல. கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடக்கப்பட்டு அனைவரும் வீ்ட்டில் இருந்த போது தலையின் கூடையையும் மனதில் பயத்தையும் சுமந்து கொண்டு எமது தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கச் சென்றனர்.

நாட்டில் எல்லா உள்நாட்டு உற்பத்திகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தேயிலை உற்பத்தி மாத்திரம் சீரான நிலையில் சென்றது.

காலநிலை மாற்றத்தினால் தேயிலை உற்பத்தி 10% குறைந்த போதும் அதன் விற்பனை விலை குறையவில்லை.

இலங்கை தேயிலை சபை இணையத்தின் ஊடாக முன்னெடுத்த ஏலத்தில் 2019ம் ஆண்டு செப்டெம்பர் 542 ரூபாவாக இருந்த தேயிலை ஒரு கிலோவின் விலை 2020 செப்டெம்பர் 624 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டது.

தேயிலையின் தரம் உயர்ந்துள்ளது. ஆனால் அந்த தேயிலை கொழுந்தை பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் உயரவில்லை. அதேபோல தேயிலையின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

இன்று பல தோட்டங்களில் தேயிலை மலைகள் கைவிடப்பட்டுள்ளன. தேயிலை தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. சில தொழிற்சாலைகள் துறுப்பிடித்துள்ளன.
இந்த தொழிற்சாலைகளை பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்துவது குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஊடாக சிறு கைத்தொழில் பேட்டைகளை குறித்த தொழிற்சாலைகளின் ஆரம்பித்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அதன்மூலம் தொழில்வாய்ப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரம் முன்னேறும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாத 12,000 தொடக்கம் 15000 ஏக்டராக தரிசு நிலங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தரிசு நிலங்கள் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்.

எனவே இந்த தரிசு நிலங்கள் இளைஞர்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதற்கு. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செயற்படுத்தப்பட வேண்டும்.. ஆனால் குறித்த நிலங்கள் வெளியாட்களுக்கு பிரித்து கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் சிலோன் டீ என்ற சின்னத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிங்கம் பொறிக்கப்பட்ட சின்னமும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை வரவேற்க வேண்டிய விடயம். மேலும் சிலோன் டீ சின்னம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முகக்கவசம் 30 முறை கழுவி மீள பயன்படுத்தக் கூடியது என இலங்கை தேயிலை சபை அறிவித்தது.

இங்கு உள்ள மிகவும் கவலையான விடயம் என்றவென்றால், வெயில், மழை பாராது உயிரையும் துச்சமாக நினைத்து கொரோனா வைரஸ் காலத்திலும் வேலை செய்யும் தோட்ட தொழிளாளர்களுக்கு ஏன் இந்த பாதுகாப்பான முகக்கவசம் வழங்கப்படவில்லை என அரசாங்கத்திடம் கேட்க விரும்புகிறேன்.” – என்றார்.

No comments:

Post a Comment