கொரோனாவால் இன்று வீதிகளில் மக்கள் இறக்கும் நிலை - இன்னும் சில தினங்களில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் : ஹரீன் பெர்ணான்டோ - News View

Breaking

Post Top Ad

Friday, November 13, 2020

கொரோனாவால் இன்று வீதிகளில் மக்கள் இறக்கும் நிலை - இன்னும் சில தினங்களில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் : ஹரீன் பெர்ணான்டோ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதாக தெரிவித்துக் கொண்டு அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. அதேபோன்று சட்டத்தை மீறி உற்ற நண்பர்களை போஷிக்கும் செயலை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலை தொடருமாக இருந்தால் வீதிக்கிறங்கி போராடி அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தொடர்பில் நாட்டில் நிகழ்கால நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க போராடுவதில்லை. மாறாக அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கவும் சட்டத்தை புறந்தள்ளி தனது உற்ற நண்பர்களை போஷிப்பதற்குமே முயற்சிக்கின்றது. 

கொரோனாவால் இன்று வீதிகளில் மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் மாடி வீடுகளில் மக்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி போராடுகின்றனர்.

அத்துடன் புத்திஜீவிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது, நல்ல முன்மாதிரியாக இருந்து, நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகும். ஆனால், புத்திஜீவிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சிலரின் நடவடிக்கையால்தான் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தோல்வியுற்றிருக்கின்றன.

நாடு பாரிய அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், மக்களை அதில் இருந்து பாதுகாக்க இவர்களால் தேவையான எந்த வழிகாட்டல்களையும் மேற்கொள்ள முடியாமல், எதிர்க்கட்சியை விமர்சிக்கும் செயலையே மேற்கொண்டு வருகின்றனர். அதனால், இந்த புத்திஜீவிகளின் பேச்சைக் கேட்டு செற்படுவதால்தான் “கோத்தா பைல்“ என நாங்கள் தெரிவிக்கின்றோம்.

அதனால் ஜனாதிபதி தொடர்ந்தும் இவர்களின் பேச்சைக் கேட்டு நாட்டை தொடர்ந்தும் அனர்த்தத்துக்குள்ளாக்க முற்பட்டால் நாங்கள் வீதிக்கிறங்கி போராடுவோம். அடுத்து வரும் இரண்டு வருடங்களில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

மேலும் நாட்டுக்குள் இரண்டு இலச்சம் என்டிஜன் பரிசோதனை குழாய்கள் கொண்டுவந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதனை எவ்வாறு இறக்குமதி செய்தது என்பதை சுகாதார அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு எமக்கு இலவசமாக அந்த பரிசோதனை குழாய்களை தருவுதாக தெரிவிக்கும் நிலையில் யாருடைய தேவைக்காக பணம் கொடுத்து அதனை இறக்குமதி செய்ய வேண்டும்.

அதேபோன்று நாட்டில் சீனி மாபியாவும் இடம்பெற்று வருகின்றது. அரசாங்கத்துக்கு தேவையான நிறுவனம் ஒன்று 50ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை மறைத்து வைத்திருக்கின்றது. இன்னும் சில தினங்களில் நாட்டில் சீனிக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனால் ஜனாதிபதி தொடர்ந்தும் கம்பனி காரர்களுக்கு அடிபணிந்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது. 

எமது நடவடிக்கைகள் தோல்வியுற்றதால் நாங்கள் இன்று எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். அந்த நிலை ஜனாதிபதிக்கு ஏற்படுவதற்கு முன்னரே நாங்கள் எதிர்க்கட்சி என்ற வகையில் எமது கடமையை செய்கின்றோம். தொடர்ந்தும் இந்த நிலை ஏற்படுமாக இருந்தால் வீதிக்கிறங்கி போராடுவோம். இந்த அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad