கொரோனா சமூகப் பரவலாகிவிட்டது அரசு உண்மைகளை மறைக்கின்றது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்திலும் ஊழல் : லக்‌ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

கொரோனா சமூகப் பரவலாகிவிட்டது அரசு உண்மைகளை மறைக்கின்றது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்திலும் ஊழல் : லக்‌ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என அரசு கூறினாலும் வைரஸ் சமூகப் பரவலாகிவிட்டது. அரசு மட்டுமே இந்த உண்மைகளைத் தொடர்ந்தும் மறைத்துக் கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனத்திலும், அரசு ஊழல் செய்துள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று இரண்டு மணி நேரம் மாத்திரம் சபை அமர்வுகள் இடம்பெற்றன. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவித்திருந்தார். இதனையடுத்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு தொடர்வில் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு “சுகாதாரப் பணிப்பாளர் நியமன விடயத்தில் அரசு முன்னெடுத்த தெரிவு தவறானதாகும். சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட தெரிவாகவே இந்த நியமனம் அமைந்துள்ளது. 

இப்போது நியமிக்கப்பட்டுள்ள சுகாதார பணிப்பாளர், நியமனப் பட்டியலில் பின் வரிசையில் இருந்தவரே. இம்முறை பணிப்பாளர் தெரிவில் கண்டியைச் சேர்ந்த வைத்தியர் ரத்நாயக்கவே தெரிவாகியிருக்க வேண்டும். ஆனால், பட்டியலில் நான்காம், ஐந்தாம் தரவரிசையில் உள்ளவரை நியமித்துள்ளனர். எனவே இது அரசின் தேவைக்காக ஊழல் செய்து இவ்வாறான தெரிவுகளை முன்னெடுத்துள்ளமை தெளிவாக வெளிப்படுகின்றது. 

அதுமட்டுமல்ல சுகாதார அமைச்சர் சபைக்கு வந்த நேரம் தொடக்கம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே கூறிக்கொண்டுள்ளார். ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறிவிட்டது. அரசாங்கம் மட்டுமே இன்னமும் சமூகப் பரவல் இல்லை என்ற பொய்யை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றது” என்றார்.

தினக்குரல்

No comments:

Post a Comment