கடந்த 5 வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல் போயுள்ளது - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

கடந்த 5 வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல் போயுள்ளது - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

கடந்த 5 வருடங்களில் 500 ஊடகவியலாளர்களுக்கு தொழில் இல்லாமல் போயுள்ளதுடன் அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு சதமேனும் நஷ்டயீடும் கிடைக்கப் பெறவில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஊடகத்துறை, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் பிராந்திய உறவுகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிகாரிக்கப்படும்போது அவர்கள் இறுதிக் கட்டமாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பிப்பார்கள். அதன் அடிப்படையிலே கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்கு போதுமான எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இறுதியாக வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்களின் போராட்டத்தின் மூலம் அவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கே இருக்கின்றன. என்றாலும் அந்த மக்களின் போராட்டத்தை ஒரு சில ஊடகங்களே வெளிப்படுத்தியிருந்தன. இது கவலைக்குரிய விடயமாகும்.

அதேபோன்று கொவிட் தொற்றுக்கு ஆளாகிய நபர் ஒருவரை சுகாதார பிரிவினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது, பாரிய குற்றவாளியை எடுத்துச் செல்வது போன்றே சில ஊடகங்கள் அதனை வெளிப்படுத்துகின்றன. இது அவர்களுக்கு போதுமான பயிற்சி இல்லாமையே காரணமாகும். அதனால் ஊடகவியலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் கொவிட் காரணமாக ஊடகவியலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகத்துறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்களாகும். அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 5 வருடத்தில் 500 ஊடகவியலாளர்கள் தங்களின் தொழிலை இழந்துள்ளதாக இணையத்தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு சதமேனும் நஷ்ட ஈடு கிடைத்ததாக இ்ல்லை.

அதனால் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை கருத்திற்கொண்டு அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment