விவசாயத்துறையை மேம்படுத்த 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்தவும் எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

விவசாயத்துறையை மேம்படுத்த 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்தவும் எதிர்பார்ப்பு

(இராஜதுரை ஹஷான்)

மூன்று வருட காலத்துக்குள் கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கும், விவசாயத்துக்கு தேவையான விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் மாத்தளை மாவட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவும் வாழ்வாதார மேம்பாட்டு குழு தீர்மானித்துள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்துக்கமைய செயற்படும் வாழ்வாதார மேம்பாட்டுக்குழுவின் 1 ஆவது கலந்துரையாடல் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றது.

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் மேற்பார்வையின் கீழ் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

குழுவில் உள்ள அமைச்சர்கள் மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பில் கொள்கை திட்டங்களை பின்வருமாறு முன்வைத்தனர்.

சுற்றுலாத்துறை
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம், கொவிட்-19 வைரஸ் தாக்கம் உள்ளிட்ட காரணிகளினால் சுற்றுலாத்துறை சேவை வீழ்ச்சியடைந்துள்ளது. 

சுற்றுலாத்துறை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது மாத்தளை மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சினால் 20 மில்லியன் நிதியும், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் 750 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரஹாகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் சுற்றுலா தலத்தை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 500 ஹெக்டர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

விவசாயத்துறை
விதை உற்பத்தியை வினைத்திறனான முறையில் செயற்படுத்த பாரிய செயற்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காய விதையினை தம்புள்ளையிலிருந்தும், உருளை கிழங்கு விதையினை நுவரெலியாவிலும், பச்சை மிளகாய் விதையினை கண்டி உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களிலும் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் காப்புறுதி நடவடிக்கை சிறந்த முறையில் செயற்படுத்தவும், காப்புறுதி தொகையினை 2 இலட்சத்தால் அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

3 வருட காலத்துக்குள், கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விதை உற்பத்திக்காக 750 மில்லியனும், மாத்தளை மாவட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த 4000 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்படுவதாகவும், தம்புள்ளை உர களஞ்சியசாலை உருவாக்கத்துக்கு 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். 

வனஜீவராசிகள்
மாத்தளை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் யானை - மனித மோதல் தீவிரமடைந்துள்ளது. இம்மோதலை தடுக்க மின்வேலி அமைப்பதற்கு 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களையும், வள விலங்குகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment