மட்டக்களப்பில் இறால், மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கு 381 ஏக்கர் அரச காணி - ஈ.ஐ.ஏ. அறிக்கையினை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கவும் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

மட்டக்களப்பில் இறால், மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கு 381 ஏக்கர் அரச காணி - ஈ.ஐ.ஏ. அறிக்கையினை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கவும் தீர்மானம்

எஸ்.எம்.எம்.முஷித் 

மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் முதலைக்குடா, மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால் மற்றும் மீன் வளர்ப்புத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கேற்ற காணிகளாக இனங்காணப்பட்ட 381 ஏக்கர் அரச காணியில் சுற்றாடல் மதிப்பீட்டறிக்கையினைப் (ஈ.ஐ.ஏ) பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன், நவீன முறையில் இறால் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்புத்திட்டங்களை அறிமுகஞ்செய்யும் அரசின் விசேட திட்டத்தினை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைங்களங்களுடன் கலந்தாலோசிக்கும் விசேட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன் தலைமையில் நேற்று (18) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது, அடையாளம் காணப்பட்ட முதலைக்குடா, மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள 381 ஏக்கர் அரச காணியில் ஈ.ஐ.ஏ. அறிக்கையினைப் பெற்றுக் கொள்ளவும், நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்ட வரைபினைத் தயாரிக்கவும் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபைக்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. 

இது தொடர்பாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம், வன வளத் திணைக்களம், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் விசேட கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. 

இக்களவிஜய அறிக்கையின் அடிப்படையில் ஈ.ஐ.ஏ. அறிக்கையினைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளது. 

இவ்விசேட கூட்டத்தில் காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப்பணிப்பாளர் ரவிகுமார், பட்டிப்பளைப் பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் திருமதி பீ.மேனகா மற்றும் விவசாய, நீர்ப்பாசன, மீன்பிடி, சுற்றாடல் அதிகார சபை, வன வளம், காணி உபயோக திட்டமிடல் பிரிவு போன்ற திணைக்களங்களின் உயரதிகாரிகள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post a Comment