சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் காலமானார்

சம்சுங்கை தனது உத்திகளால் உலக நிறுவனமாக்கிய அதன் தலைவர் லீ குன்-ஹீ காலமானார்.

உலக அளவில் மின்னணு சாதனப்  பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சம்சுங். தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சம்சுங் (Samsung) குழுமத்தின் தலைவர் லீ குன்-ஹீ இன்று (25) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

78 வயதான லீ குன்-ஹீ மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரு லீ 1938 ஆம் ஆண்டில் சம்சுங் குழுமத்தை நிறுவிய லீ பைங்-சுலின் மூன்றாவது மகன் ஆவார். அவர் 1968 இல் குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார் மற்றும் 1987 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றார்.

1942 ஆம் ஆண்டில் பிறந்த லீ, அவரது தந்தையும் சம்சுங் நிறுவனருமான லீ பியுங்-சல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 1987 ஆம் ஆண்டு முதல் சம்சுங் குழுமத்தை வழிநடத்தியுள்ளார்.

தென் கொரிய நிறுவனத்தை உலக அளவில் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக கொண்டு சேர்த்த லீ குன்-ஹீ 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மாரடைப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு குறித்து சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் பத்திரிகை அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, “சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ காலமானதை நாங்கள் கவலையுடன் அறியத் தருகிறோம்.

தலைவர் லீ ஒக்டோபர் 25 ஆம் திகதி துணைத் தலைவர் ஜே ஒய் லீ உட்பட அவரது குடும்பத்தினரின் அருகில் காலமானார்.

“தலைவர் லீ ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளர், சம்சுங்கை ஒரு உள்ளூர் வணிகத்திலிருந்து உலக முன்னணி கண்டுபிடிப்பாளராகவும் தொழில்துறை அதிகார மையமாகவும் மாற்றியவர் அவர் ” என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் 12 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடான தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சம்சுங் நிறுவனத்தின் துணை தலைவர் ஜே ஒய் லீ, கடந்த 2014-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். 

சம்சுங் தென் கொரியாவின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பத்திற்கு சொந்தமான கூட்டு நிறுவனங்களாகும். தென் கொரியா பங்குச்சந்தையின் சம்சுங் மூலதனம் 10 சதவீதம் ஆகும்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோஹ் டே-வூவுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட குற்றச் செயல்களில் லீ குன்-ஹீ  இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

வரி ஏய்ப்பு மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கு பின்னர் அவர் 2008 இல் சம்சுங் தலைவர் பதவியில் இருந்து விலகினார். வரி ஏய்ப்பு செய்ததற்காக அவருக்கு மூன்று ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் 2009 ஆம் ஆண்டில் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது.

2010 இல் சம்சுங் குழுமத்தின் தலைவராக திரும்பினார். ஆனால் 2014 ஆம் ஆண்டு மாரடைப்பால் படுக்கையில் இருக்கத் தொடங்கினார்.

லீ குன்-ஹீ மகன், ஜே ஒய் லீ, இலஞ்ச ஊழலில் அவரது பங்கிற்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். இது அப்போதைய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹைவை 2017 இல் பதவியில் இருந்து வெளியேற்றத் தூண்டியது என்பது இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment