காத்தான்குடி பொதுமக்களுக்கு Covid -19 தடுப்பு செயலணி விடுக்கும் முக்கிய அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

காத்தான்குடி பொதுமக்களுக்கு Covid -19 தடுப்பு செயலணி விடுக்கும் முக்கிய அறிவித்தல்

எம்.எஸ்.எம்.நுர்தீன்

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் COVID-19 கொரோனா வைரசானது கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் கணிசமாக பரவியுள்ளது.

குறிப்பாக மினுவாங்கொடை கொத்தனி, பேலியகொட மீன் சந்தை கொத்தனி என சகல பிரச்சினையான பகுதிகளிலிருந்தும் நேரடியாக தொடர்புடைய பலர் எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாலும் அவர்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறுவதாலும் பொதுமக்கள் பின்வரும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள். 

1. பொது மக்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.

2. முகக் கவசமின்றி வீதிகளில் நடமாடுபவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. வெளியூரிலிருந்து எமது ஊரிற்கு வருகை தரும் எமதூர் பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலோ அல்லது தங்களது பிரதேச கிராம சேவையாளரிடமோ உடனே பதிவு செய்யவும். (உள்ளுர் பொதுமக்களும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும்)

4. வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதிகளிலிருந்து ஊரிற்கு வருகை தர இருப்பவர்கள் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பதோடு தங்களுக்குரிய சுய தனிமைப்படுத்தல் வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட பின்னரே ஊரிற்கு வருகை தர வேண்டும். தேவை ஏற்படின் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதோடு தவறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

5. பொதுமக்கள் வீணாக வீதிகளில் கூடி நிற்பது, கடற்கரை, சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் பேன்றவற்றுக்கு செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

6. திருமண (நிக்காஹ்) நிகழ்வு மாத்திரம் பத்துப்பேருக்கு உட்பட்ட வகையில் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியுடன் நடாத்த முடியும் என்பதோடு மருதானி, வலிமா, வரவேற்பு போன்ற எந்த நிகழ்வுகளும் நடாத்த மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

7. மரணம் ஒன்று நிகழும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிக்கு அல்லது நகர முதல்வருக்கு அறிவித்து விட்டு ஜனாஸா நல்லடக்கத்தை விரைவில் நடாத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.

8. வலீமா, கூட்டம் போன்ற நிகழ்வுகழுக்கு மண்டபங்கள் வாடகைக்கு வழங்குவதும், பொதுமக்கள் தங்குவதற்காக அறைகள் வாடகைக்கு விடுவதும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

9. பள்ளிவாயல்கள் ஜமாஅத் தொழுகைக்காக மாத்திரம் திறந்து தொழுகை முடிந்தவுடன் மூடிவிட வேண்டும். மேலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சுகாதார அமைச்சு என்பன வெளியிடும் கொவிட்-19 தொடர்பான சுற்று நிருபங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

10. ஹோட்டல், வர்த்தக நிலையம் என்பன முகக் கவசம் கை கழுவுதல், சமூக இடைவெளிகளை பேணுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வதோடு அது தொடர்பில் பொறுப்பாக ஒருவரை நியமித்தல் வேண்டும்.

11. முடி வெட்டும் சலூன் கடைகளுக்கென சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுவதோடு தவறும் பட்சத்தில் வியாபார அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

12. பொதுச்சந்தை நிருவாகிகள் சந்தை இயங்கும் நேரத்தை அதிகரித்து சன நெரிசலை குறைக்க உரிய ஏற்பாடுகளை செய்வதோடு கை கழுவுதல், சமூக இடைவெளிககளை பேணுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வதோடு அது தொடர்பில் பொறுப்பாக ஒருவரை நியமித்தல் வேண்டும்.

மேற்படி அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் நடந்து தங்களையும் தங்கள் ஊரையும் பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நன்றி
இவ்வண்ணம்
காத்தான்குடி நகருக்கான COVID-19 தடுப்பு செயலணி சார்பாக.

SHM.அஸ்பர் JP
நகர முதல்வர்,
நகரசபை,
காத்தான்குடி.

No comments:

Post a Comment