Brandix ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை PCR சோதனைக்கு முன்வருமாறு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

Brandix ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்களை PCR சோதனைக்கு முன்வருமாறு அழைப்பு

செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு பின்னர் மினுவாங்கொடை Brandix ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் PCR சோதனைக்காக முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (10) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போது வரை 4,523 பேருக்கு கொரோன தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அதில் குறித்த ஆடைத் தொழிற்சாலை மூலமாக அதன் ஊழியர்கள் 1,034 பேர் உள்ளிட்ட 1,083 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Brandix நிறுவன ஊழியர்களுடன் தொடர்புடைய 46 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 328,880 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த சுதத் சமரவீர, மினுவாங்கொடை கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி முதல் நாடு முழுவதும் 26,000 இற்கும் அதிக PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரினதும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடையோருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக தொற்றாளர்களுடன் தொடர்புபட்டு, நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு எடுக்கும் 4 - 10 நாட்களை கருத்திற் கொண்டு, அதன் அடிப்படையில் PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஏதோவொரு வகையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் காணப்படுவார்களாயின், தங்களது பிரதேசத்திலுள்ள சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் மூலம், தொற்றாளர்களை விரைவாக அடையாளம் காணவும், நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் முடியும் என்பதால், இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment