மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு சவால் விடுத்தார் லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு சவால் விடுத்தார் லக்ஷ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

இந்தியாவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தியதாக ஆடைத் தொழிற்சாலை தெரிவிப்பதாக இருந்தால், அவர்களை தனிமைப்படுத்திய இடம் மற்றும் தகவல்களை முடியுமானால் வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் சவால் விடுத்தார். 

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தனிப்பட்ட தெளிவுபடுத்தல் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியாவில் இருந்து ஒரு குழு வந்திருக்கின்றது. கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதியே இவர்கள் வந்திருக்கின்றனர். 

ஆனால் இவ்வாறு வந்தவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய தனிமைப்படுத்தியதாக குறித்த நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அப்படியாயின் இவ்வாறு வந்தவர்களின் பெயர் பட்டியல், அவர்களை தனிமைப்படுத்திய இடம் போன்ற தகவல்களை முயுமானால் எமக்கு வழங்க வேண்டும். 

குறித்த நிறுவனம் நாட்டுக்கு பல சேவைகளை வழங்கி வரும் தொழிற்சாலையாகும். அதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து ஒரு குழு கடந்த செப்டம்பர் மாதம் வந்திருக்கின்றது. அவர்களை தனிமைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அவ்வாறு இடம்பெறவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. 

அதனால் குறித்த ஆடைத் தொழிற்சாலை, இந்தியாவில் இருந்து வந்தவர்களின் பெயர் பட்டியல், அவர்களை தனிமைப்படுத்திய இடம் போன்ற தகவல்களை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் ஊடாக முடியுமானால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment