கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாத, கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட, சிம் அட்டை ஊடாக தொலைத் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தும் சிம் அட்டைகள் இன்று (01) முதல் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தாங்கள் கொள்வனவு செய்யும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும், TRC யின் அனுமதி பெற்று பதிவு செய்யப்பட்டவையா என உறுதிப்படுத்துமாறு, பாவனையாளர்களுக்கு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களில் இணைக்கப்பட்டுள்ள சிம் அட்டைகளால் இயங்கும் சாதனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

தனிப்பட்ட நபர்கள் இணையத்தளம் உள்ளிட்ட ஏனைய வழிகளின் ஊடாக இவ்வாறான தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.trc.gov.lk) வழியாக பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

தங்களது தொலைத்தொடர்பு உபகரணங்களில் TRCSL இனால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர் உள்ளதா என சரிபார்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதன் நம்பகத்தன்மையை அறிய முடியும் என்பதோடு, இதற்காக 15 இலக்கங்கள் கொண்ட சர்வதேச தொலைபேசி சாதன அடையாள இலக்கத்தை IMEI 1909 எனும் இலக்கதிற்கு SMS செய்வதன் மூலம் அறிய முடியும். (IMEI இடைவெளி <15இலக்க IMEI இலக்கம்>)

IMEI இலக்கத்தை அறிய *#06# என டயல் செய்ய வேண்டும்.

பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அதிக கதிர்வீச்சை வெளியிடும் போலியான மற்றும் உரிய தரத்தில் தயாரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்கள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று (01) முதல், சிம் அட்டைகள் மூலம் இயக்கப்படும் பதிவு செய்யப்படாத தொலைத்தொடர்பு உபகரணங்களில் காணப்படும் சிம் அட்டைகள், அந்தந்த தொலைபேசி வலையமைப்பினால் செயலிழக்கப்படும், அதே நேரத்தில், அத்தகைய உபகரணங்களை அதன் உறுதித் தன்மையை அறிந்து பதிவு செய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்றும், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷதா சேனாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment