போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா தொடர்ந்தும் மோதல் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா தொடர்ந்தும் மோதல்

தெற்கு காகசஸில் முழு அளவில் போர் ஒன்று வெடிப்பதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, ஜெனீவா நகரில் கூடவிருக்கும் நிலையில் அசர்பைஜான் மற்றும் ஆர்மேனிய இனப் படைகளுக்கு இடையில் நேற்றும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நகொர்னோ கரபக் பிராந்தியத்தைச் சூழவே புதிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

கன்ஜா நகர் மீது ஆர்மேனிய படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக அசர்பைஜான் குறிப்பிட்டுள்ளது.

கொரன்போன் பிராந்தியத்தில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. ஏனைய கிராமங்கள் மீது ஆர்மேனிய இனப்படையினர் சூடு நடத்தியதாகவும் அசர்பைஜான் கூறியது.

கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி மோதல் ஆரம்பமானது தொடக்கம் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அசர்பைஜான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் மேலும் 143 பொதுமக்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடும் அசர்பைஜான் இராணுவத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குறிப்பிடவில்லை.

மறுபுறம் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நகொர்னோ கரபக் பிராந்திய ஆர்மேனிய இன நிர்வாகத்தினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மலைப் பிராந்தியமான நகொர்னோ கரபக் அசர்பைஜான் நாட்டு எல்லைக்குள் இருந்தபோதும் அது ஆர்மேனிய இனப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த மோதல் ஆரம்பித்தது தொடக்கம் 12 பொதுமக்கள் மற்றும் 320 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக ஆர்மேனிய இனப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு அசர் பைஜான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் ஆர்மேனியா தனது வெளியுறவு அமைச்சரை அனுப்பவில்லை.

இந்நிலையில் ஆர்மேனிய வெளியுறவு அமைச்சரை வரும் திங்கட்கிழமை மொஸ்கோவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

அசர்பைஜானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் பாதுகாப்பு கூட்டாளியான ரஷ்யா இந்த மோதலில் நேரடியாக தலையிடும் வாய்ப்பு அதிகரித்திருப்பதே சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment