மைத்திரி, கோத்தா கொலை சதி தொடர்பில் வெளியானது முக்கிய விடயம் : கூலிக்கு அமர்த்தப்பட்டவரே நாமல் குமார, பூஜித் ஜயசுந்தர சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

மைத்திரி, கோத்தா கொலை சதி தொடர்பில் வெளியானது முக்கிய விடயம் : கூலிக்கு அமர்த்தப்பட்டவரே நாமல் குமார, பூஜித் ஜயசுந்தர சாட்சியம்

(எம்.எப்.எம்.பஸீர்) 

ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்யவும், உதவி பொலிஸ் அத்தியட்சர் (தற்போதைய சி.ஐ.டி. பணிப்பாளர்) பிரசன்ன அல்விஸை கொழும்பில் வைத்து கொலை செய்யவும், மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு பரப்பவும், சதி செய்ததாக கூறப்படும் விடயத்தை வெளிப்படுத்தியவர் ஜனாதிபதி செயலகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 

நாமல் குமார ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெற்ற ஒருவர் எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும்போதே முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை வெளிப்படுத்தினார். 

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொய் கூறுவதை வழமையாகக் கொண்டிருந்ததாகவும் பூஜித ஜயசுந்தர சாட்சியமளித்தார். 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட, ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது. 

ஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில், அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும் ஆணைக்குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தவாரு சாட்சியமளித்த பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு.

'இந்த நாமல் குமார என்பவர் போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் உரைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர் வவுச்சர்கள் ஊடாக பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அந்த செயலனியின் தலைவர் வைத்தியர் சமந்த கித்தலகம தெரிவித்தார். 

விஷேட சலுகைகளுடன் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய நாமல் குமார போன்றோர், சலுகைகளுடன் ஆளுநர்களாக கடமையாற்றியவர்கள் ஆலோசகர்களாக இருந்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழுவில் விடயங்களை வெளிப்படுத்த தயராகவே உள்ளேன். 

நாமல் குமார கண்டி சம்பவத்தின்போது ஒரு உளவாளியாக தொடர்புபட்டார். அவர் அப்போது வழங்கிய தகவல்களுக்காக 5 இலட்சம் ரூபா அவருக்கு பொலிஸ் அறக்கட்டளையிலிருந்து பரிசும் அளிக்கப்பட்டது. 

நாமல் குமாரவின் விடயங்களின் பின்னால் இருந்தவர்கள், தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டல் குண்டுதாரி ஜமீல் குண்டை வெடிக்கச் செய்ய முன்னர், சந்தித்த உளவுத்துறை அதிகாரி தொடர்பிலும் விசாரிக்குமாரு இந்த ஆணைக்குழுவிடம் நான் கோருகின்றேன்' என சாட்சியமளித்தார். 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது, 'கடந்த ஏபரல் 14 ஆம் திகதி பூஜித ஜயசுந்தர புது வருடத்துக்கு வாழ்த்து தெரிவிக்க வந்து தனது இல்லத்தில் இரு மணி நேரம் வரை இருந்தும் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கையை தனக்கு கூறவில்லை' என, வழங்கிய சாட்சியத்தை மையப்படுத்தி பூஜித ஜயசுந்தர மேலதிக சாட்சியங்களை முன்வைத்தார். முன்னாள் ஜனாதிபதி கூறியமை சம்பூரணமாக பொய்யான விடயங்கள் என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். 

'வெற்றிலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு சென்றேன். செல்லும் முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானி ரொஹான் சில்வாவுக்கு கதைத்து, 'ரொஹான் நான் வெற்றிலை கொடுக்க வருகின்றேன். உங்களுக்கு நிலைமை தெரியும் தானே. எனக்கு வருவதற்கு சிக்கல் உள்ளது. எனவே, நீங்கள் பிரதான வாயில் அருகே வாருங்கள். நான் வருகின்றேன்.' என கூறிவிட்டே சென்றேன். 

ரொஹான் அவர் அவ்வாறே வருவதாக கூறினார். நான் பெஜட் வீதி வீட்டுக்கு சென்றபோது பிரதான வாயில் அருகே ரொஹான் வந்தார். அவருடனேயே உள்ளே சென்றேன். அப்போதும் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுக்க பலர் வரிசையில் காத்திருந்தனர். நான் ரொஹானுடன் வரிசையில் நிற்காது மற்றைய பகுதியூடாக சென்றேன். சென்று வெற்றிலையை கொடுத்து முன்னாள் ஜனாபதிக்கு மரியாதை செய்தேன். எனினும் அவர் அதனை சிரிதும் கூட கணக்கில் கொள்ளவில்லை. ரொஹான் எனக்கு அருகிலேயே இருந்தார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, நான் எனது மனைவியுடன் வந்ததாக கூறியிருந்தார். எனது மனைவி அங்கு வரவே இல்லை. அவர் வருவதற்கு மறுத்திருந்தார். அங்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன். அங்கு சாப்பிடுவதை விடுத்து, ஒரு குவளை தண்ணீர் கூட குடிக்கவில்லை.' என பூஜித ஜயசுந்தர முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய சாட்சியம் பொய்யானது என தெரிவித்து சாட்சியமளித்தார். 

இதன்போதே மைத்திரிபால சிறிசேன வழமையாகவே பொய் சொல்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்ததாக பூஜித ஜயசுந்தர சுட்டிக்கடடினார். பூஜித ஜயசுந்தரவிடம் மேலதிக சாட்சி விசாரணைகள் இன்றும் இடம்பெறவுள்ளது

No comments:

Post a Comment