ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) சமர்ப்பித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கையிலும் ஜெனிவாவிலும் வசிக்கும் இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள பொறிமுறைகள்' தொடர்பான பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள குறிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் பின்வரும் அவதானிப்புக்களை மேற்கொள்ள விரும்புகின்றது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'அச்சுறுத்தும் விஜயங்கள்', 'கண்காணிப்பு', 'துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்' மற்றும் 'பழிவாங்கல்கள்' தொடர்பாக, குறித்த சம்பவங்களை விசாரணை செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அல்லது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது.

அரசாங்கம் ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் உறுதிபூண்டுள்ள அதேவேளை, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் குறித்து பெற்றுக் கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்து, வழக்குத் தொடருவதனை உறுதி செய்கின்றது.

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதனைத் தவிர, குறிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்திய ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

உலகெங்கிலுமுள்ள அடிப்படைவாத மற்றும் தீவிரமான கூறுகளின் நுட்பங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நலன்களை இணங்கச் செய்யும் எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை எதிர்கொள்ளும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, இந்த சூழலில் அத்தகைய யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது.

No comments:

Post a Comment