மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் பேசி நடவடிக்கை எடுக்க பிரதமர் மஹிந்தவை நாளை சந்திக்கிறார் ஹரீஸ் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் பேசி நடவடிக்கை எடுக்க பிரதமர் மஹிந்தவை நாளை சந்திக்கிறார் ஹரீஸ் எம்.பி.

அபு ஹின்ஸா 

இயற்கையாக நடைபெற்ற ஒன்றாக இருந்தாலும் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள் கடலுக்குள் செல்வது என்பது இறைவனின் சாபத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாகும். இது எல்லா சமூகத்தையும் மட்டுமின்றி பொறுப்பிலுள்ள சகலருக்கும் வந்துவிடும். இந்த சாபத்திலிருந்தாவது விடுபட இந்த வேலைத்திட்டத்தை அவசரமாக உடனடியாக செய்ய வேண்டும் என்று கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு கூறியதுடன் மட்டுமல்லாது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை நாளை சந்தித்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்க உள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (11) மாலை தனியார் ஊடகம் ஒன்றின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மாளிகைக்காடு சாய்ந்தமருது பிரதேசத்தில் இப்போது மனித நேயத்திற்கே சவால் விடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மாளிகைக்காடு கடற்கரையில் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்த அந்த ஜனாஸா மையவாடியின் அரைவாசியை கடல் அடித்து சென்றுவிட்டது. 

இப்போது கடல் உள்நோக்கி வருவதை தடுப்பதற்காக ஊரில் உள்ள இளைஞர்கள், அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் இணைந்து ஒவ்வொரு நாளும் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு நான் அவசரமாக சென்று நிலையை எத்திவைத்து முறையிட்டேன். 

இது இயற்கையாக நடைபெற்ற ஒன்றாக இருந்தாலும் நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்கள் கடலுக்குள் செல்வது என்பது இறைவனின் சாபத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாகும். இது எல்லா சமூகத்தையும் மட்டுமின்றி பொறுப்பிலுள்ள சகலருக்கும் வந்துவிடும். இந்த சாபத்திலிருந்தாவது விடுபட இந்த வேலைத்திட்டத்தை அவசரமாக உடனடியாக செய்ய வேண்டும் என்று கூறினேன்.

இது தொடர்பில் நாளை எமது நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இது மனித அவலமாக மாறிவிடும் என்பதையும் அதனை அண்டியதாக பக்கத்தில் இந்து மயானமும் ஒன்று இதே நிலையில் உள்ளது என்பதையும் இந்த இடங்களின் ஆபத்து நிலைகளையும் விளக்கி அவசர காலமாகவும் அனர்த்த நிலையாகவும் கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment