முஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் - News View

About Us

About Us

Breaking

Friday, October 30, 2020

முஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்

எம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline)

முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூக சேவையாளரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான எச்.எம்.எம். றியாழ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஐந்தாண்டுகளாக முஸ்லிம் அரசியலுடன் என்னை இணைத்துக் கொண்டு பயணித்தவன் என்ற வகையில், முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடு முஸ்லிம் சமூகத்துக்கு நலவை விட அதிக தீங்குகளையே உருவாக்கியுள்ளதையே என்னால் கண்டு கொள்ள முடிந்தது. அதன் காரணமாகவும் எனது ஐந்தாண்டு அனுபவத்தினூடாகவும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென்ற கருத்தை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்கின்றேன். 

நிகழ்கால முஸ்லிம் அரசியல் சிலரால் வியாபாரமாகவும் இன்னும் சிலரால் பொழுது போக்காகவும் செய்யப்படுகிறது. இப்போக்கு எமது பிரதேச கலாசாரத்தை சீரழித்து, பிளவுகளை உண்டு பண்ணியுள்ளது. இதன் காரணமாக அநாகரீகமான ஒரு அரசியல் போக்கு தோற்று விக்கப்பட்டுள்ளது. இதுவே முஸ்லிம் அரசியலுக்கு மூலதனமாகியுள்ளது. 

முஸ்லீம் அரசியல் கட்சிகளிடத்தில் முஸ்லிம் சமூகம் தொடர்பிலான திட்டமிடலுடன் கூடிய நிகழ்ச்சி நிரலோ, சமூக ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிபுணர் குழுக்களோ இல்லை என்பதுடன், புத்திஜீவிகள் உள்வாங்கப்படுவதில்லை என்பது பெருங்குறையாகவும் பின்னடைவாகவும் காணப்படுகின்றது. 

முஸ்லிம் கட்சிகளிடம் கூட்டு முடிவுகள் இல்லை என்பதுடன், தனி மனிதனே சகலதையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் முடிவெடுப்பவராகவும் திகழ்வதுடன், தனி மனிதனின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே முஸ்லிம் கட்சிகளின் போக்குள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் அடையாளக் கட்சியை உருவாக்கிய மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பிற்காலத்தில் தேசிய அரசியல் நீரோட்டத்தின் யதார்த்தத்தை உணர்ந்து, தேசிய ஒற்றுமையை இலக்காகக் கொண்டு பொதுவான அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்தார். 

முஸ்லிம் இன ரீதியான கட்சிகள் உருவாக்கத்தின் பின்னர், நாங்கள் பெரும்பான்மை இனத்தின் நம்பகத்தன்மையை இழந்துள்ளதுடன், உரிமை சார்ந்து எதையும் அவர்களிடம் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான பிரிவினைவாத அரசியல் போக்கு பல்வேறு சமூகப் பாதிப்புக்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

சிங்கள பேரினவாத கட்சிகளின் உருவாக்கத்திற்கு வழிகோலியுள்ளதுடன், பெரும்பான்மையின மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கியுள்ளது. இதன் விளைவாக பெரும்பான்மையின அரசியல்வாதிகள் சிறுபான்மை முஸ்லிகளுக்கெதிராக இனவெறி உணர்வுகளை எளிதில் முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனங்களுக்கிடையில் பெரும் இடைவெளியும் பிளவும் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அந்தந்தக் கட்சிகளை கலைத்து விட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து சமூகம் சார் அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டும். அதுவே முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு ஆரோக்கியமானதாக இருக்குமென உறுதியாக நம்புகிறேன்.
 
அத்தோடு, முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் போக்கு தொடர்பில் மாற்றங்களைக் கொண்டு வரவும் முஸ்லிம் அரசியலைத் தீர்மானிக்கவும் புத்திஜீவிகள், அரசியல் விற்பன்னர்கள், சிந்தனையாளர்கள் கொண்ட ஒரு உயரிய சபை கூடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும், அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (அல் குர்ஆன் 4 :135)

No comments:

Post a Comment