புற்று நோய் மற்றும் உளநல வைத்திய பிரிவுகளை மத்திய அரசு கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது - முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

புற்று நோய் மற்றும் உளநல வைத்திய பிரிவுகளை மத்திய அரசு கையகப்படுத்துவதை ஏற்கமுடியாது - முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்று நோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சியானது 13 வது திருத்தச் சட்டத்தினை ஒழிக்கும் செயற்பாடாகவே பார்க்க முடியும் என வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் புற்று நோய் வைத்திய சிகிச்சை பிரிவு மற்றும் உளநல வைத்தியப் பிரிவினை, மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது.

அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது.

இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையானது அதிகாரபரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் 13 வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வை மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும்.

போதனா வைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்க வேண்டும் என்று 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment