கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இரு தரப்பு ஒப்பந்தம் : அமைச்சர் டக்ளஸூக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் கலந்தரையாடல் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 17, 2020

கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இரு தரப்பு ஒப்பந்தம் : அமைச்சர் டக்ளஸூக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் கலந்தரையாடல்

இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றை இலங்கை - வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பாம் தி பிஜ் நொகெக் (Pham Thi Bich Ngoc) ஆகியோருக்கிடையில் இன்று (17) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

2021 - 2025 ஆம் ஆண்டு வரையான வேலைத் திட்டங்களை உள்ளடக்கிய இரு தரப்பு ஒப்பந்தத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பான தொழில் நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு உட்பட நீர் வேளாண்மை தொடர்பான நவீன முறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வியட்நாமில் இருந்து துறைசார் நிபுணர்களை வரவழைத்து இறால் வளர்ப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறைகளையும் நீர்வேளாண்மை விருத்தி தொடர்பான விஞ்ஞான ஆய்வுப் பட்டறைகளை நடத்துவது தொடர்பான விடயங்களையும் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளடக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டம் 2010 - 2013 ஆண்டு காலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமையை அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், கடந்த கால அனுபவங்களை கருத்தில் எடுத்து புதிய இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment