யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகர சபையின் கூட்டத்தை நடத்துவோம் என்கிறார் மேயர் ரோசி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகர சபையின் கூட்டத்தை நடத்துவோம் என்கிறார் மேயர் ரோசி

(எம்.ஆர்.எம்.வஸீம்)

யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தை நாளை நடத்தியே ஆகுவோம் என கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று பரவும் அச்சுறுத்தல் இருக்கும் பிரதேசங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதேசம் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

குறிப்பாக மாநகர சபை பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான சர்மிலா கோணவள மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொவிட் தொற்று மாநகர எல்லைக்குள் பாரியளவில் பரவி இருக்கின்றது.

மாநகர சபையின் சுகாதார துறையில் பணிபுரியும் ஊழியர்களும் இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில், நாளை 29ஆம் திகதி இடம்பெற இருக்கும் மாநகர சபையின் சபை அமர்வை வேறு தினத்துக்கு பிற்போடுமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரில் தற்போது உக்கிரமடைந்துள்ள கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு மாநகர சபை கூட்டத்தை நடத்த தேவையில்லை என மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு அறிவுறுத்தியதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பாக ரோசி சேனாநாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில், நிதி சட்டமூலங்கள் பலவற்றை அனுமதித்துக் கொள்ளவும் மாநகரில் வாழும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்குடன் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதற்காக நாளை இடம்பெறும் மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தை நடத்தியாக வேண்டும். அதனால் யார் எதிர்த்தாலும் கொழும்பு மாநகர சபை மாதாந்த கூட்டத்தை நடத்தியே ஆகுவோம் என்றார்.

No comments:

Post a Comment