ஆர்மேனியா - அசர்பை ஜான்நாடுகளுக்கிடையிலான மோதல் : அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

ஆர்மேனியா - அசர்பை ஜான்நாடுகளுக்கிடையிலான மோதல் : அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய நகொர்னோ-ரபக் பிராந்தியத்தை ஒட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் பிராந்தியம் அசர்பைஜான் நாட்டுக்குள் இருந்தபோதும் ஆர்மேனிய இனத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் ஆர்மேனிய மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுக்கு பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா கடந்த புதனன்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மோதல் பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி, பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். மோதலை நிறுத்தும்படி உலக வல்லரசு நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன.

ஆர்மேனியாவின் இராணுவக் கூட்டணியைக் கொண்ட ரஷ்யா அந்நாட்டில் இராணுவ முகாம் ஒன்றையும் வைத்துள்ளது. எனினும் ரஷ்யா அசர்பைஜானுடனும் நெருக்கமான உறவை கொண்டுள்ளது.

ஆர்மேனியாவின் ஆதரவு கொண்ட தரப்பு நகொர்னோ-ரபக் பிராந்தியத்தில் தன்னாட்சியை பிரகடனம் செய்தபோதும் அதனை சர்வதேசம் அங்கீகரிக்கவில்லை.

இந்த மோதல் வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை. எனினும் ஆர்மேனியப் படை அந்த பிராந்தியத்தில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்து போராடுவதாக அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உறுதி அளித்துள்ளார். “ஆர்மேனிய படைகள் எமது பூமியில் இருந்து நிபந்தனை இன்றி முழுமையாக வெளியேற வேண்டும் என்பதுவே எமது ஒரே நிபந்தனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் நேட்டோ கூட்டணிகளான பிரான்ஸ் மற்றும் துருக்கிக்கு இடையே முறுகலை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் ஆர்மேனியர்கள் அதிகம் வாழ்வதோடு துருக்கி அசர்பைஜானின் நெருங்கிய நட்பு நாடாகும்.

அசர்பைஜான் மீதான ஆர்மேனிய ஆக்கிரமிப்புக்கு பிரான்ஸ் உதவுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு கடந்த புதன்கிழமை குற்றம்சாட்டினார். துருக்கி போர்க்குணம் கொண்ட செய்திகளை வெளியிடுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இதனை சாடி இருந்தார்.

No comments:

Post a Comment