தனியார் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - பாடசாலை மாணவர்கள் 21 பேர் உட்பட 36 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

தனியார் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - பாடசாலை மாணவர்கள் 21 பேர் உட்பட 36 பேர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் 21 பேர் உட்பட 36 பேர் காயமடைந்ததை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே, போடைஸ் 30 ஏக்கர் பகுதியில் இன்று (02) காலை 7.25 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. 

விபத்தினால் பஸ்ஸில் பயணித்த 36 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பாடசாலை மாணவர்கள் 21 பேர் உள்ளடங்குவதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்களை 1990 நோயாளர் காவு வண்டியின் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

விபத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும், பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் -எம்.கிருஸ்ணா)

No comments:

Post a Comment