அரசாங்கம் கொரோனா பரவல் பழியை மக்கள் மீது சுமத்திவிட்டு, 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கிறது : முஜூபுர் ரஹூமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

அரசாங்கம் கொரோனா பரவல் பழியை மக்கள் மீது சுமத்திவிட்டு, 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சிக்கிறது : முஜூபுர் ரஹூமான்

(செ.தேன்மொழி) 

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே, தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான், வைரஸ் பரவல் கொத்தணி தொடர்பில் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம், அதன் பழியை மக்கள் மீது சுமத்திவிட்டு, தொடர்ந்தும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், சிக்கலான ஏற்பாடுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே ஆதரவு வழங்க கூடாது என்றும் கூறினார். 

மேலும், அரசாங்கம் கடந்த காலங்களில் கொவிட்-19 வைரஸ் பரவலை வெற்றி கொள்வதைவிட, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோல்வியடையச் செய்வது தொடர்பிலே கவனம் செலுத்தி வந்தது. இதனால் வைரஸ் பரவல் தொடர்பான அவதானத்தை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வந்தது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் தலைவர்கள் பலர் தாங்கல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் கூறிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் மக்கள் வைரஸ் பரவல் தொடர்பில் கவனம் செலுத்துவதை கைவிட்டனர். 

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் இந்த நிலைமைக்கு மக்களே பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவிக்க முற்படுகின்றது. 

வைரஸ் தொற்றாளர்களை கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உலகச் சுகாதார ஸ்தாபனமும், சுகாதார பிரிவுகளும் ஆலோசனை வழங்கி வந்த போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தவில்லை. 

புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அச்சம் நிறைந்த சூழலில் பரீட்சையில் தோற்ற வேண்டிய சூழ்நிலையையும் அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

இந்நிலையில் அரசாங்கம் வைரஸ் பரவல் தொடர்பான பழியை மக்கள் மீது சுமத்திவிட்டு, தொடர்ந்தும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது. 

அத்தோடு, 20 ஆவது திருத்த சட்டமூலத்தில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவாக சிந்தித்து கட்சி, பேதமின்றி, தங்களது மனசாட்சிக்கமைய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment