இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட 200 கிலோ கேரள கஞ்சா மற்றும் சட்ட விரோத மாத்திரைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 18, 2020

இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட 200 கிலோ கேரள கஞ்சா மற்றும் சட்ட விரோத மாத்திரைகள் மீட்பு

மன்னார் பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஓலைத்தொடுவாய் பகுதியில் ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கேரளாக் கஞ்சாவை மன்னார் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரும் மன்னார் பகுதி ஊழல் ஒழிப்பு பிரிவினரின் மூலம் மன்னார் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இன்று (18) அதிகாலை 4.30 மணியளவில், ஒலைத்தொடுவாய் பகுதியை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே இக்கேரளக் கஞ்சாப் பொதிகள் கைப்பற்ப்பட்டுள்ளன.

இதன்போது, 94 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 200 கிலோ 825 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலைத்தொடுவாய் பகுதியில் கடற்கரையோரத்தில் ஒரு காட்டுப் பகுதி ஒன்றில் குறித்த கேரளா கஞ்சாப் பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பந்துல வீரசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக, மன்னார் பிரதான பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கிருஷாந்தனின் வழிகாட்டலுடன் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பொறுப்பதிகாரி ஆர்.டீ. வீரசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரால் இச்சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாதபோதிலும், சந்தேகநபர்களைத் தேடி பொலிசார் வலை வீசியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட நிலையில மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி சட்ட விரோத மாத்திரைகளை நேற்று (17) சனிக்கிழமை மாலை திருக்கேதீஸ்வரம் சந்தியில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மாத்திரைகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(எஸ். றொசேரியன் லம்பேட், வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment