போலியான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளனர் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

போலியான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளனர் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பானை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பானை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோருக்கு இந்த அழைப்பானை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் திலீபன் என்பவரை நினைவு கூரும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் எந்த வித நிகழ்வினையும் ஏற்பாடு செய்யாத நிலையில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

பொலிஸார் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கானது உண்மைக்கு புறம்பான வழக்காகும். திலீபனின் நினைவு தினத்தினை நாங்கள் அனுஸ்டிக்க இல்லை, ஆனால் நாங்கள் அனுஸ்டிக்க நினைத்ததாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

ஏற்கனவே தடையுத்தரவு ஒன்றினை இரவு வேளைகளில் வீடுகளுக்கு கொண்டு தந்திருந்தார்கள். 25ஆம் திகதி இரவு திலீபனின் நினைவு தினத்தினை செய்யக்கூடாது என்ற தடையுத்தரவினை தந்திருந்தார்கள். அவ்வாறு இருக்கத்தக்கதாக அந்த நிகழ்வு நடைபெறாத நிலையில் நாங்கள் அதனை நடாத்துவதற்கு எத்தனித்ததாக இந்த குற்றச்சாட்டு எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டாக இருக்கின்ற காரணத்தினால் எங்களது முறைப்பாட்டினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளோம். இந்த வழக்கிற்கு முகம்கொடுப்பதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம். இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது என்பது மனவேதனைக்குரியதாகயிருக்கின்றது. 

கடந்த காலத்தில் இந்த விடயங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றது. தற்போது பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் போடுவது என்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment