எண்ணெய் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுப்பு - மீட்புப்பணியில் இலங்கை கடற்படை, விமானப் படை - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

எண்ணெய் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுப்பு - மீட்புப்பணியில் இலங்கை கடற்படை, விமானப் படை

எம்.டி. நியூ டயமண்ட் என்ற கப்பலின் பிரதான இயந்திரத்தின் அறையில் கொதிகலன் வெடித்தத்தையடுத்து ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தற்போதும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இலங்கை கடற்படை மற்றும் விமானப்டை, இந்திய கடலோர காவல்படையினர் ஆகியேர் தற்போது இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

2020 செப்டம்பர் 03 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் அம்பாறை சங்கமன் கந்தை கடற்பரப்பில் 38 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் பயணித்தபோது தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட நபர் சுமார் 57 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் எல்மோர் என்ற பெயரை உடைய பிலிப்பைன்ஸ் நாட்டவர் என கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தீ சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

பனாமா அரசுக்கு சொந்தமான இந்த கப்பல் 270,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மற்றும் 1,700 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 31 கடல் மைல் தொலைவில் பனாமா தேசிய கொடியுடன் இந்தியா நோக்கி பயணித்த MT New Diamond என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

இலங்கையின் கடற்பிராந்தியத்திலிருந்து 31 கடல் மைல் தொலைவில், இந்தியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கப்பல் விபத்திற்குள்ளானதாகவும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் பணியாளர்களை மீட்கவும் கடற்படையும் விமானப் படையும் இணைந்துபணியாற்றி வருவதாகவும் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்கவிடம் வினவிய போது, அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 31 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இக்கப்பல் இந்தியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடுமென விசாரணைகளில் தெரியவருவதுடன், இது குறித்து மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகப்டர்களும், கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காயங்களுக்குள்ளான ஒருவர் கப்பலிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், ஏனையவர்கள் மாற்று கப்பலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த விபத்து தொடர்பில் கடற்படை பேச்சாளர் துஷான் விஜயசிங்க, கப்பலில் பாதிப்புக்குள்ளான பணியாளர்களை மீட்கும் பணிக்காக திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து 02 கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமிலிருந்து ஒரு கப்பலும் சம்பந்தப்பட்ட கடற்பிரதேசத்திற்கு சென்றிருப்பதாக கடற்படை பேச்சாளர் துஷான் விஜயசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad