ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களை வழங்குவது மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுக்கும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்களை வழங்குவது மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுக்கும் - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை

(நா.தனுஜா) 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்ற அரசியலமைப்பின் 20 வது திருத்தம் கடந்த கால வரலாற்றுக்கு எவ்வித முன்னுரிமையையும் வழங்காமல், ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அதிகாரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கிறது. இவ்வாறான மட்டுமீறிய அதிகாரங்களை தனியொரு நபரின் கைகளில் வழங்குவதென்பது மீளத்திருத்திக் கொள்ள முடியாத மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என்று வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை செய்திருக்கின்றது. 

மேலும் அரசியலமைப்பென்பது குறித்த நாட்டிற்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமே தவிர தனி நபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் அந்த இயக்கம், 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையின் கீழ் நாட்டின் ஜனாதிபதி உள்ளடங்கலாக எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றது. 

20 வது திருத்த யோசனையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மேலும் கூறியிருப்பதாவது அரசாங்கம் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

நாட்டு மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு மதிப்பளிக்கும். அதேவேளை, நாடு என்ற வகையில் அனைத்து இலங்கையர்களும் பயனடைய வேண்டுமென்றால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற மறுசீரமைப்புக்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவான கலந்தாராய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

அரசியலமைப்பாக இருந்தாலும் அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டுமே தவிர, வெற்றி பெற்றவர்களுக்கானதாக மாத்திரம் இருக்கக்கூடாது. தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற அரசியலமைப்பின் 20 வது திருத்தம் கடந்த கால வரலாற்றுக்கு எவ்வித முன்னுரிமையையும் வழங்காமல், ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அதிகாரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கிறது. 

இந்த மறுசீரமைப்புக்கள் ஜனாதிபதியினால் நன்நோக்கத்துடனேயே முன்மொழியப்பட்டிருக்கும் என்று நம்புவதற்கே நாங்கள் விரும்புகின்றோம். ஆனாலும் இவ்வாறான மட்டுமீறிய அதிகாரங்கள் தனியொரு நபரின் கைகளில் வழங்கப்படுவதென்பது மீளத்திருத்திக் கொள்ள முடியாத மிகமோசமான அழிவுகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மனதிலிருத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். 

அரசியலமைப்பின் 17 வது மற்றும் 19 வது திருத்தங்கள் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருந்தன என்பதுடன் அத்தகைய முற்போக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டதிலிருந்தே சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அவற்றுக்கு ஆதரவளித்தது. அந்த வகையில் எதிர்காலத்தில் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் 19 வது திருத்தத்தின் மூலமான ஜனநாயக நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, அவற்றைப் பின்நோக்கித் திருப்புவதாக அமையக்கூடாது. 

நாடொன்றின் நிர்வாகம் என்பது ஜனநாயகக் கட்டமைப்புக்களாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும் முன்மொழியப்பட்டுள்ள 20 வது திருத்தம் தனியொரு நபரின் கைகளில் அதிகாரங்களை வழங்குவதில் கவனத்தைக் குவித்திருக்கின்றது. இந்த மறுசீரமைப்புக்கள் நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்றுக்கு வழிவகுக்கக் கூடியவையாக இருப்பதுடன் இது பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் நாட்டை சிதைவடையச் செய்யும். 

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையின் கீழ் எந்தவொரு நபரும் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட முடியாது. இது தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும். ஆனால் கவலைக்குரிய விதமாக 20 வது திருத்தம் ஜனாதிபதியை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துகின்றது. பாராளுமன்றமும் நீதித்துறையும் ஜனாதிபதிக்கு அடிபணியும் நிலையேற்படுகிறது. 

அதுமாத்திரமன்றி 20 வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்பிற்கும் அப்பால் நிறுத்தப்படுகின்றார். அரசியலமைப்பென்பது குறித்த நாட்டிற்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமே தவிர, தனி நபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கத் தேவையில்லை. 

ஆனால் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தத்தின் ஊடாக முக்கிய பதவிகளுக்கான நியமனங்களைச் செய்வதற்கும் நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் ஜனநாயகத்தையும் இயல்புவாழ்க்கை ஒன்றை வாழ்வதற்கான மக்களின் சுதந்திரத்தையும் பாதிப்பதாக அமையும். 

மேலும் 20 வது திருத்தத்தின் கீழ் சுயாதீனமான கட்டமைப்புக்கள் எவையும் இல்லை. அரசியலமைப்புப் பேரவையை பாராளுமன்றப் பேரவையின் மூலம் பதிலீடு செய்வதற்கான முன்மொழிவொன்று செய்யப்பட்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல்களையோ அல்லது பொலிஸ் சேவையையோ எதிர்பார்க்க முடியாது. 

அத்தோடு நீதிபதிகளையும் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீதித்துறையில் சுயாதீனத்துவம் இவ்வாறான வெட்கக்கேடான முறையில் பறிக்கப்படக்கூடாது. 

இரட்டைக்குடியுரிமையைக் கொண்டவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் உயர் பதவிகளை வகிப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது. கணக்காய்வு ஆணைக்குழுவின் நீக்கம் ஊழல், மோசடிகள் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். 

எனவே தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற 20 வது திருத்தம் ஒரு வெள்ளைக் காகிதமாகக் கருதப்பட்டு நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் விரிவானதொரு கலந்தாராய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment