பாடசாலை, பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி அவதானம் - உள்நாட்டில் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உற்பத்தி செய்வதற்கும் ஊக்குவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

பாடசாலை, பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி அவதானம் - உள்நாட்டில் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை உற்பத்தி செய்வதற்கும் ஊக்குவிப்பு

எதிர்வரும் வருடத்திலிருந்து பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பில் கூடிய வீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அவதானத்தை செலுத்தியுள்ளார்.

பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று (28) முற்பகல் தங்கொட்டுவ தொழிற்பேட்டை Dankotuwa Textile Mill (Pvt) Ltd, கந்தான, கப்புவத்த வேன்காட் Vanguard Industrial (Pvt) Ltd மற்றும் வத்தளை Textile Mill (Pvt) Ltd நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடசாலை சீருடைகளுக்காக செயற்படுத்தப்பட்ட வவுச்சர் முறைமையின் காரணமாக பாரிய முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்களை மூட வேண்டி ஏற்பட்டதாக கைத்தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். அதிகமானோர் இதனால் தொழில்களை இழந்தனர்.

தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Creative Textile Mill (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஜனாதிபதி அவர்கள் முதலாவதாக சென்றார். இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை 2015 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. எந்தவொரு வருமானமும் பெறப்படாத நிலையில் ஒரு வருடத்திற்கு எட்டு மில்லியன் ரூபாய் வட்டியாக அதன் உரிமையாளர் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Creative Textile நிறுவனம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து நூலை இறக்குமதி செய்து துணியை உற்பத்தி செய்வதன் மூலம் 500 பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதன் உற்பத்தி அளவை ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் துணி மீற்றர்கள் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வருடாந்த பாடசாலை சீருடைத் தேவை 11 மில்லியன் மீற்றர்களாகும்.

துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு ஆர்வமூட்டிய ஜனாதிபதி, சுயதொழிலாக துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பாடசாலை சீருடைக்கு அவசியமான துணிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் பற்றியும் கண்டறியுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உள்நாட்டு துணி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவினங்களை 68 வீதத்தினால் சேமிக்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உள்நாட்டு துணியை கொள்வனவு செய்வதன் மூலம் கல்வி அமைச்சுக்கு வருடாந்தம் 80 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதியை சேமிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.

பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டை தொடர்பாக முன்வைத்த பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி தமது அவதானத்தை செலுத்தினார்.

2015க்கு முன்னர் பாடசாலை சீருடை தேவையின் 40 வீதத்திற்கு தமது பங்களிப்பை வழங்கிய கந்தானை, கப்புவத்த வேன்காட் நிறுவனம், தற்போது படுக்கை விரிப்பு மற்றும் துவாய்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நிறுவனத்தின் முழுமையான உற்பத்தி செயற்பாடுகளை அவதானித்த ஜனாதிபதி, துணிக்கு உள்நாட்டு சந்தையில் நிலவுகின்ற தேவையை நிறைவு செய்யுமளவிற்கு அதன் கொள்ளளவை அதிகரிக்குமாறு நிறுவன முகாமைத்துவத்திற்கு ஆர்வமூட்டப்பட்டது. தமது நிறுவனத்திற்கும் பாடசாலை சீருடை துணிகளுக்கான தேவையில் 30 வீதத்தை வழங்க முடியுமென்று நிர்வாகம் குறிப்பிட்டது.

Dankotuwa Textile Mill (Pvt) Ltd, நிறுவனத்தின் கிளையான வத்தளை Creative Textile Mill (Pvt) Ltd நிறுவனத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். முப்படையினரின் சீருடைகளுக்காக துணி அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. 1500 பேர் அளவில் அங்கு சேவையில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படையினருக்கு அவசியமான வகையில் துணிகளுக்கு நிறமூட்டுவது நிறுவனத்தின் பிரதான செயற்பாடாகும். இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பரீட்சிக்கப்படாததுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்கின்ற துணிகளை பரீட்சிப்பதற்காக அதிகளவில் செலவிட வேண்டியுள்ளதாக நிர்வாகம் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டது.

ஆடைகளை கழுவ பயன்படுத்தப்படும் சலவை தூள் உரிய தரத்துடன் இல்லாமையின் காரணமாக துணிகளின் நிறத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர். அரசாங்கம் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்பை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுமாறு அவர்களை ஜனாதிபதி, கேட்டுக்கொண்டார்.

இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற தேசிய மற்றும் பௌத்த கொடிகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், கேள்விக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிமையாளரிடம் கூறினார்.

அமைச்சர் விமல் வீரவங்ச ஜனாதிபதியுடன் இக்கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment