உலகின் செல்வந்த கால்பந்து வீரராக தொடர்ந்தும் மெஸ்ஸி - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

உலகின் செல்வந்த கால்பந்து வீரராக தொடர்ந்தும் மெஸ்ஸி

தனது செல்வத்தை அதிகரிக்க வழி செய்யும் பார்சிலோனா கழகத்தில் இருந்து வெளியேறும் முயற்சி தோல்வியடைந்தபோதும் உலகின் செல்வந்த கால்பந்து வீரராக லயனல் மெஸ்ஸி தொடர்ந்து நீடிக்கிறார்.

போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் பட்டியலில், சம்பளமாக 92 மில்லியன் டொலர்கள் மற்றும் ஏனைய ஒப்பந்தங்களாக 34 மில்லியன் டொலர்கள் என மெஸ்ஸி இந்த ஆண்டில் ஈட்டும் தொகை 126 மில்லியன் டொலர்களாகும்.

எதிர்பார்த்தது போல் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமூக ஊடகத்தில் அதிகம் பின்பற்றப்படுபவரும் ஜுவன்டஸ் கழக முன்கள வீரருமான ரொனால்டோ இந்த ஆண்டில் ஈட்டும் தொகை 117 மில்லியன் டொலர்களாகும்.

மூன்றாவது அதிக செல்வந்த கால்பந்து வீரராக நெய்மர் உள்ளார். அவர் 96 மில்லியன் டொலர் ஈட்டுகிறார். அவரது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் சக வீரரான 21 வயது கைலியன் ம்பாப்பே 42 மில்லியன் டொலர்களுடன் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் ஏழாவது இடத்தில் இருந்தே முன்னேற்றம் கண்டுள்ளார்.

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் உலகின் செல்வந்த உள்நாட்டு கால்பந்து லீக்காக இருந்தபோதும் அதில் ஆடும் மூன்று வீரர்கள் மட்டுமே போர்பஸ் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர். 

ப்ரீமியர் லீக் சம்பியன் லிவர்பூலின் முன்கள வீரர் முஹமது சலாஹ் 37 மில்லியன் டொலர்களுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பதோடு மன்செஸ்டர் யுனைடட் மத்தியகள வீரர் போல் பொக்பா 34 மில்லியன் டொலர்களை ஈட்டி ஆறாவது இடத்தில் காணப்படுகிறார். பொக்பாவின் சக அணி வீரரான கோல் காப்பாளர் டேவிட் டி கீ 27 மில்லியன் டொலர்களுடன் 10 ஆவது இடத்தில் உள்ளார்.

பார்சிலோனாவின் அன்டோனி க்ரீஸ்மன் ஏழாவது இடத்திலும் ரியல் மெட்ரிட்டின் கிரேத் பேல் எட்டாவது இடத்திலும் உள்ளனர். புன்டஸ்லிகாவில் இருந்து ஒரே வீரராக பெயர்ன் முனிச் முன்கள வீரர் ரொபர்ட் லெவன்டோஸ்கி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். 

சம்பியன்ஸ் லீக்கில் பெயர்ன் முனிச்சிடம் 8-2 என்ற கோல் வித்தியாசத்தில் பார்சிலோனா படு தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியில் இருந்து வெளியேறும் விருப்பத்தை மெஸ்ஸி வெளியிட்டிருந்தார். எனினும் அதில் உள்ள சிக்கல்கள் காரணமாக மற்றொரு பருவத்திற்கு அந்த அணிக்காக ஆட அவர் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார். 

குறிப்பாக மெஸ்ஸியை விடுவிப்பதற்காக 700 மில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு அவரை வாங்கும் அணி தள்ளப்பட்டதை அடுத்தே மெஸ்ஸி தனது முடிவை மாற்றிக்கொண்டார். எனினும் 33 வயதான மெஸ்ஸிக்கு பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது. அவர் பார்சிலோனாவில் தொடர்ந்து நீடிப்பதால் 83 மில்லியன் கொடுப்பனவுத் தொகை ஈட்டி தொடர்ந்து செல்வந்த கால்பந்து வீரராக நீடிக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad