மலேசியாவில் திடீர் ஆட்சி மாற்றமா? : எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பால் பரபரப்பு, இல்லையென ஆளும் தரப்பு மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

மலேசியாவில் திடீர் ஆட்சி மாற்றமா? : எதிர்க்கட்சித் தலைவரின் அறிவிப்பால் பரபரப்பு, இல்லையென ஆளும் தரப்பு மறுப்பு

மலேசியாவில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்து விட்டதாகவும் புதிய அரசை அமைப்பதற்கு தமக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த 2018 இல் நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகம்மது (94) தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதி கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன.

பக்காத்தான் ஹராப்பான் என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, மகாதீர் முகம்மது பிரதமரானார். ஆனால் இந்தக் கூட்டணி அரசு 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

கூட்டணி குழப்பங்கள் காரணமாக கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் மகாதீர் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் திருப்பமாக மகாதீர் முகம்மது தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக இருந்த முஹைதீன் யாசின் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். இதன் மூலம் அவர் பிரதமர் ஆனார்.

அதனைத் தொடர்ந்து அன்வர் இப்ராஹிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். இதனிடையே முஹைதீன் யாசின் அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என்றும் எந்நேரத்திலும் ஆட்சி கவிழக்கூடும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பிரதமர் முஹைதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்து விட்டது என்றும் புதிய அரசை அமைப்பதற்கு தமக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். 

தனது மனைவியுடன் நேற்று மதியம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்த அன்வர் இப்ராஹிம் ஆட்சி அமைப்பது தொடர்பாக மன்னரை சந்திக்க அனுமதி கோரியிருப்பதாக தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது கடவுளுக்கு நன்றி. தற்போது எனக்கு உறுதியான, போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது குறித்து மன்னரிடம் தெரிவிப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை, மலாய்தான் அதிகாரப்பூர்வ மொழி என்பதை நிலைநிறுத்தும் வகையில் எனது அரசு செயல்படும்.

பூமிபுத்திரர்கள் மற்றும் அனைத்து இனத்தவர்களும் தங்களது உரிமைகளை தற்காப்பதற்கான உறுதிமொழியை அளிப்பதாகவும் புதிய அரசு இருக்கும். ஊழலுக்கு முடிவு கட்டும் விதமாகவும் மக்கள் நலனைப் பாதுகாப்பதாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எனினும் தமக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்த அவர், மன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் அதனை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக அன்வர் இப்ராஹிம் கூறியதை ஆளும் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மலேசிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்து “இப்போதுதான் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. ஆட்சி கவிழவும் இல்லை ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே மலேசிய மன்னர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அன்வர் இப்ராஹிம் அவரை சந்திப்பது கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

வரும் திங்கட்கிழமைக்குள் மன்னரை சந்திக்க முடியும் என தான் நம்புவதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அன்வர் இப்ராஹிமின் திடீர் அறிவிப்பால் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

No comments:

Post a Comment