ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் - பொதுமக்கள் ஐவர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் - பொதுமக்கள் ஐவர் பலி

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறி வைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கொமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். 

ஈரான் நாட்டின் ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது

இதையடுத்து, சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பலி வாங்குவோம் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறி வைத்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இந்த ஏவுகணை தாக்குதல் சில சமயங்களில் தவறுதலாக பொதுமக்கள் குடியிருப்பை தாக்கி அப்பாவிகளில் உயிர்களை காவு வாங்கி வருகிறது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து நேற்று திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 

ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தவறுதலாக ராணுவ தளத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியை தாக்கியது.

இதில் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஈராக் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள், மூன்று குழந்தைகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment