நாட்டில் கொரோனா இருந்ததை மறந்து செயற்படும் மக்கள், அவதானம் அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Monday, September 28, 2020

நாட்டில் கொரோனா இருந்ததை மறந்து செயற்படும் மக்கள், அவதானம் அவசியம் என்கிறார் இராணுவத் தளபதி

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் இருந்தமை தொடர்பில் மக்கள் இன்று மறந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராணுவத் தளபதி, சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை வெறுமனே 50 நாட்களுக்குள் தடுக்க முடிந்தது. அதேபோல் மக்கள் அதனை கட்டுப்படுத்த பெரும் தியாகங்களையும் செய்தனர். மக்களின் அர்ப்பணிப்பால்தான் இந்த நிலைமை 50 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடிந்தது. எனினும் நாட்டில் கொவிட் 19 இல்லையென சொல்வது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

தொடர்ந்தும் முகக் கவசங்களை அணிவது மிக முக்கியம். அத்துடன் சுகாதாரத் தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். இவற்றை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 2,82,197 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது. (27) மாத்திரம் 1,410 பி.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அதேபோல், நேற்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த 08 பேரும், பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும், ஐக்கிய அரபு இராஜியத்திலிருந்து வந்த ஒருவரும் (27) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். 139 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முப்படையால் நிர்வகிக்கப்படும் மத்திய நிலையங்களிலிருந்து 606 பேர் (28) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 45,636 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்துள்ளதுடன், இராணுவத்தால் பராமறிக்கப்படும் 77 மத்திய நிலையங்களில் இருந்து 7,484 பேர் வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, ஓமானிலிருந்து 101 பேரும், டுபாய் மற்றும் ஜப்பானிலிருந்து 88 பேரும் நேற்று (28) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad