புணாணையில் இடம்பெற்று வரும் மண்ணகழ்வினைத் தடுக்கக்கோரி விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

புணாணையில் இடம்பெற்று வரும் மண்ணகழ்வினைத் தடுக்கக்கோரி விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு விவசாயிகளினால் மாதுறுஓயா கிளை ஆற்றில் இடம்பெறும் மணல் அகழ்வினைத் தடுக்கக்கோரி இன்று செவ்வாய்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

புணாணை, கிடச்சிமடு விவசாய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் கிடச்சிமடு விவசாய கண்டத்திலிருந்து ஆரம்பமாகி ரிதிதென்னை சந்தி வரை சென்றடைந்தது.

இதன் போது, "மண்ணகழ்வின் மூலம் விவசாயத்தினை அழிக்காதே, மண்ணகழ்வின் மூலம் புணாணை மேற்கில் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட நெற்காணிகள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது யார்? வனபரிபாலன புவிச்சரிதவியல் திணைக்களமே புணாணை மேற்கில் மண்ணகழ்விற்கு அனுமதி வழங்காதே, தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழிக்காதீர், மண்ணகழ்வால் இன்றோடு வன வளமில்லை" எனப்பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதால், பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெற்காணிகள் மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை. அத்தோடு, மண்ணகழ்வில் ஈடுபடுபவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் நண்பர்கள் போன்று பழகுவதால் இவர்களின் உதவியுடன் மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக, வாய்க்கால் ஆழமான நிலைமையில் காணப்படுவதால், விவசாய நிலம் பள்ளமாகக் காணப்படுகின்றது. இதனால் விவசாயச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவது பாரிய பிரச்சனையாகக் காணப்படுவதுடன், மணல் அகழ்வில் ஈடுபடுவதால் விவசாயிகள் பயன்படுத்தும் பாதைகள் சிதைவடைந்து காணப்படுவதாக என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மண்ணகழ்வு விடயத்தில் உரிய அதிகாரிகள் கரிசணை காட்ட வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச செயலக உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரி ஆகியோருக்கு மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர் கருத்துத் தெரிவிக்கையில், தங்கள் பிரதேச எல்லைக்குட்பட்ட வீதிகளை மணல் அகழ்வில் ஈடுபடுவோர் சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு, பிரதேச சபைக்கு ஒரு கியூப் மணலுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால், செலுத்தப்படுவதில்லை. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்ததான் காரணமாக போராட்டம் கலைந்து செல்லப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் புணாணை மேற்கு கண்ட விவசாயிகள் மற்றும் புணாணை பன்சமஹ விகாரை விகாராதிபதி எல்லேவேவெ பீதாலங்கார ஸ்தவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment