ஊடகங்களில் குறி வைக்கப்படும் அட்டுளுகம - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

ஊடகங்களில் குறி வைக்கப்படும் அட்டுளுகம

அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விவகாரம் தேசிய ரீதியில் பேசுபொருளானதையும் சிங்கள ஊடகங்கள் இச்சம்பவத்திற்கு அதிக இடம் கொடுத்திருந்ததையும் அறிந்திருப்பீர்கள்.

“கொவிட் 19 காலத்தில் முடக்கப்பட்ட கிராமங்களில் பிரபல்யம் அடைந்த பண்டாரகமை, அட்டுளுகம கிராமத்தில் அண்மையில் பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கியதில் படுகாயத்திற்குள்ளான பொலிசார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியது. இந்த செய்தி அன்று தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பிரதான செய்தியாக இடம் பிடித்தமை அட்டுளுகம கிராமத்திற்கு மற்றுமொரு கரும்புள்ளியாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம்கள் மீது தப்பான கண்கொண்டு பார்த்த பிற சமூகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களை பன்மடங்கு சந்தேகக் கண்கொண்டே குறி வைத்தனர். அதிலும் ஓரிரு முஸ்லிம்கள் செய்யும் தவறுகள், குறை கூறுவோரின் வாய்களுக்கு மேலும் அவல் கொடுத்ததாக அமைந்தன. இவ்வாறான நிலையில்தான் அன்று அக்குறணை, அட்டுளுகம, பேருவளை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல இடங்கள் முடக்கப்பட்டன. இதனாலும் அட்டுளுகம பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது.

பின்னர் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவனிடம் இருந்து விலகி அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து தான் விரும்பியபடி வாழ்க்கை நடத்தியதால், அப்பெண்ணை பள்ளி நிர்வாகம் ஒதுக்கி வைத்து எச்சரிக்கை செய்தது. இதனால் மாற்று மதத்தினருடன் சேர்ந்து இஸ்லாத்தைக் குறை கூறி பத்திரிகை மாநாடு நடத்தி அட்டுளுகம கிராமத்திற்கு மற்றுமொரு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததையும் மறந்திருக்கமாட்டீர்கள். இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அப்பெண்ணை எச்சரிக்கை செய்ததால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 26.08.2020 அன்று பிணையில் வெளியில் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

”இரசாயன வெடி மருந்துகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒருவரை அட்டுளுகமையில் பொலிசார் கைது செய்துள்ளனர்” என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. எனினும் அவர் தனது தொழிலுக்காக (நைட்ரிக் அமிலம் - வெள்ளி / தங்கம் புடம் போடல்) வைத்திருந்ததாகவும் நீதிவான் மன்றில் நிரூபித்து அவரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்ட பீதி நீங்கியதாக இல்லை.

அட்டுளுகமையில் ஒரு சின்ன பிரச்சினை வந்தாலும், கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அதை போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தை கொடுக்க தனியார் ஊடகங்கள் தவறுவதில்லை. இது இக்கிராம மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் என்பது நம் நாட்டிற்கு புதியதல்ல, அட்டுளுகம கிராமத்தில் ஓரிருவர் இந்த வியாபாரத்தைச் செய்ததற்காக முழு கிராமத்தையும் போதை வியாபாரிகளாக படம்பிடித்துக் காட்டுவது கவலைக்குரியதாகும். ஏனைய இடங்களிலும் போதைப் பொருள் விற்பனை, பாவனை என்பன வியாபித்துள்ளன.

அட்டுளுகமையில் பொலிசார் தாக்கப்பட்ட அதேநாள் செய்தியில், பிற மதத்தினரின் வணக்க வழிபாட்டு தலமொன்றில் மதகுரு ஒருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும் ஒளிபரப்பப்பட்டது. எனினும் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கவில்லை. அது பற்றி யாரும் பேசவுமில்லை. அதைப்போல் சமூக ஊடகங்களில் விமர்சிக்கவும் மாட்டார்கள்.

புதிய அரசாங்கம் போதைப் பொருள் ஒழிப்புத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஒரு தலைப்பட்சமாக சரியாக அமுல்படுத்த எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியதாகும். அதன் அடிப்படையில் பல இடங்களில் போதைப் பொருள் பாவனையாளர்கள், விற்பனை செய்பவர்கள், உதவி செய்பவர்கள் என தராதரம் பாராமல் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக பாதுகாப்பு படையை சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முக்கிய அதிகாரிகள் கூட கைதாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது பங்கிற்கு அட்டுளுகம பகுதியிலும் போதைப் பொருள் தொடர்பில் சிலரைக் கைது செய்ய வேண்டும் என நினைத்த பொலிசார், தாம் அறிந்து வைத்திருந்த பிரஸ்தாப வீட்டை சுற்றி வளைத்தனர். இதன்போதே மேற்படி கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுடன் தொடர்புடைய எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவர் பெண்கள் என்றும் பண்டாரகமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜயசுந்தர தெரிவித்தார். இதனுடன் சம்பந்தமுள்ள மேலும் பலரைத் தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு போதைப் பொருள் விற்பனை மேற்கொள்ள வேண்டாம் என பள்ளிவாசல் சம்மேளனம், உட்பட உலமாக்கள் பல தடைவைகள் குறித்த வீட்டாரிடம் எடுத்துக் கூறியதாக ஊரின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த ஆலோசனைகள், வேண்டுகோள்களை செவிமடுக்காததன் பிரதிபலிப்பே இந்நிலையை ஏற்படுத்தியது. இந்த ஒரு குடும்பம் செய்த செயல்தான் முழு அட்டுலுகமயையுமே தலை குனியச் செய்தது.

இதற்கிடையில் அட்டுளுகமயில் நடைபெற்ற போதை ஒழிப்பு மாநாடு பற்றி ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. காதிரியத்துல் நபவிய்யா இயக்கம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளும் போதைப் பொருள் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அட்டுளுகம காதிரியத்துல் நபவிய்யா இயக்கம், ஜும்மா பள்ளி நிர்வாக சபை இணைந்து கடந்த 23.08.2020 ஆம் திகதி போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடாத்தினர். இதில் பொலிஸ் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அட்டுளுகம கிராமம் பல வழிகளிலும் பிரபல்யம் அடைந்த கிராமமாகும். 1983 ஆம் ஆண்டு அகில உலக தப்லீக் இஜ்திமா இங்குதான் நடைபெற்றது. இக்கிராமத்தில்தான் அதிக மதரஸாக்கள், அநாதைகளுக்கான மதரஸாக்கள், பெண்களுக்கான மதரஸாக்கள் என்பன இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு ஊரை அடிக்கடி ஊடகங்கள் மோசமாக சித்திரிக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும். 

நாட்டில் எவ்வளவோ குற்றங்கள் நடக்கின்ற போதிலும், தினமும் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்படுகின்ற போதிலும் எங்குமே குற்றச் செயலுக்கு முழு ஊரையும் பொறுப்பாக்குவதில்லை என்ற யதார்த்தத்தையும் சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 

Vidivelli

No comments:

Post a Comment