25 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கையிருப்பை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

25 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கையிருப்பை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவில் 25 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி பாதுகாப்புக் கையிருப்பை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தக் காலப்பகுதிக்குத் தேவையான அரிசி வருடத்தின் ஏனைய காலப்பகுதியில் தயாரிக்கப்படும்.

அரிசி மாபியாக்கள் செயற்படுவதால் அரிசியின் விலை அதிகரிக்கக் கூடுமென அச்ச நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் லங்கா சதொசயில் 25 ஆயிரம் மெற்றிக் தொன் பாதுகாப்பு அரிசி கையிருப்பை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இதற்கு களஞ்சியப்படுத்தும் செலவுடன் 2,241 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணியை லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காக அந்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் பணி மூலதன கடன் தொகையில் நான்கு (04) மாத காலத்திற்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திறைசேரியின் பிணை ஆவணத்தை வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார்.

சுப்ரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment