உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானமும் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைபில் தாக்கம் செலுத்தும் - அமைச்சர் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானமும் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைபில் தாக்கம் செலுத்தும் - அமைச்சர் கெஹலிய

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானமும் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைபில் தாக்கம் செலுத்துவதாக இருக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், குழுநிலை விவாதத்தின் போது அனைத்து தரப்பினருக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்வைப்பதற்கான உரிமையும் ஜனநாயகமும் உள்ளது. அவை நல்ல திருத்தங்களா? அல்லது மோசமானவையா? என பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும்.


19ஆவது திருத்தச் சட்டத்தில் 30 அமைச்சர்களைதான் நியமிக்க முடியும் என்றனர். ஆனால், 45 அமைச்சர்களை நியமிக்கும் ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளனர். ஆனால், நாம் 30 அமைச்சர்களை நியமிக்கக் கூடிய சூழ்நிலை இருந்தும் 16 அமைச்சர்களை நியமித்தோம். முழுமையான அரசாங்கத்தின் கீழ் 26 அமைச்சர்களைதான் நியமித்துள்ளோம். அரசியலமைப்பில் பரஸ்பர விரோதங்கள் இருப்பதால் அதில் என்ன பயனுள்ளது?

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக 39 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் பொதுவான தீர்மானமும் 20ஆவது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைபில் தாக்கம் செலுத்துவதாக இருக்கும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment