இலங்கை கொவிட்-19 தொற்று நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் ஐந்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் பாராட்டு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

இலங்கை கொவிட்-19 தொற்று நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் ஐந்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் பாராட்டு!

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

இலங்கையில் கொவிட்-19 தொற்று நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது. 

முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட்-19 ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட்-19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. 

ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை பாராட்டிய சபாநாயகர், எதிர்காலத்திலும் இலங்கை இந்த நல்லுறவை பேணுவது தொடர்பில் வலியுறுத்தினார். 

இதேவேளை, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய தூதுவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை மலேசியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். 

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் பாராளுமன்ற அமர்வுகளில் பார்வையாளராக கலந்துகொள்ளுமாறு குறித்த தூதுவர்கள் இதன்போது இலங்கையிடம் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இது தொடர்பான எழுத்து மூல அழைப்பிதழை இலங்கை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். 

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டன் யாங் க்தாய், வியட்நாம் தூதுவர் பாம் தி பிச் நொகோக், இந்தோனேசிய தூதுவர் குஸ்டி நுரா அர்தியாசா, தாய்லாந்து தூதுவர் ச்சுலமணி சார்ட்சுவன், மியன்மார் தூதுவர் ஹான் து ஆகியோர் ஆசியான் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment