19 ஆவது, 20 ஆவது திருத்தங்கள் பற்றி எவ்வித கருத்துக்களையும் கூற மாட்டேன் - மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன் - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

19 ஆவது, 20 ஆவது திருத்தங்கள் பற்றி எவ்வித கருத்துக்களையும் கூற மாட்டேன் - மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன்

(எம்.மனோசித்ரா) 

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நான் தற்போதும் இருப்பதால் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தங்கள் பற்றி எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கப்போவதில்லை. இருந்த போதிலும் சிறந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதோடு அந்த புதிய அரசியலமைப்பில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

பிரதேசங்களில் வீதி புனரமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மாத்திரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. அந்த பொறுப்புக்களை மாகாண சபை உறுப்பினர்களிடம் ஒப்படைக்க முடியும். எனவே மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

'ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் - 2020' என்ற தொனிப்பொருளில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் அரசியல்வாதிகள் பங்குபற்றிய நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தேர்தல்கள் ஆணையாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2014 ஆம் ஆண்டு உலக ஜனநாயக தினம் மற்றும் சர்வதேச இளைஞர் தினம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்போது 'இளைஞர்களுக்கு ஜனநாயகம் அவசியம், ஜனநாயகத்திற்கு இளைஞர்கள் அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 

ஆனால், நாம் தற்போது முன்னுரிமை கொடுத்திருப்பது ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் என்ற கூற்றுக்காகும். ஜனநாயகம் என்பது நினைக்கின்ற அனைத்தையும் செய்வதல்ல. மாறாக ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் செயற்படுவதாகும். 

அரசியலமைப்பும் சட்டங்களும் உருவாக்கப்படும் போது மக்களின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிகழ்வில் கலந்து கொண்டுள்ள இளம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும். 

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பது மாத்திரம் அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பல்ல. அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபற்ற வேண்டும். தற்போது அமைச்சுக்கு கிடைக்கப் பெறும் நிதியையும் வேலை வாய்ப்புக்களையும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதிலேயே பெரும்பாலான அரசியல்வாதிகள் கவனம் செலுத்துகின்றனர். மாறாக சட்டத்தை உருவாக்குவதில் அல்ல. 

கிரிக்கட் போன்ற விளையாட்டுக்களில் அணித் தலைவர்கள் இருப்பார்கள். அந்த தலைமைத்துவம் அணியை வழிநடத்துவதற்காகவேயாகும். எனினும் ஏனைய விடயங்களில் அந்த அணிக்குள் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து விடயங்களிலும் சம உரிமையே வழங்கப்படும். இதுவே ஜனநாயகமாகும்.

No comments:

Post a Comment