ஆர்மேனியா - அசர்பைஜான் மோதலில் பொதுமக்கள் உட்பட 100 பேர் பலி : ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

ஆர்மேனியா - அசர்பைஜான் மோதலில் பொதுமக்கள் உட்பட 100 பேர் பலி : ஐ.நா பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியது

சர்ச்சைக்குரிய நகோர்னோ - கரபக் பிராந்தியத்தில் ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கு இடையே நீடிக்கும் உக்கிர மோதல்களில் பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மலைப்பிராந்தியம் அசர்பைஜானின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டபோதும், 1994 இல் போர் முடிந்தது தொடக்கம் ஆர்மேனியர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நீடிக்கும் மோதல்களில் 84 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதோடு பொதுமக்கள் பலரும் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது இராணுவத்தின் இழப்புப் பற்றி அசர்பைஜான் தகவல் வெளியிடாதபோதும் தமது தரப்பில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அது உறுதி செய்துள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் இங்கு மோதல் வெடித்த நிலையில் அது தற்போது நகோர்னோ - கரபக் பிராந்தியத்திற்கு வெளியில் பரவியுள்ளது.

ஆர்மேனியாவின் கிழக்கு நகரான வார்டனிஸில் அசர்பைஜான் ஆளில்லா விமானம் ஒன்று பயணிகள் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

அசர்பைஜான் மீது கடந்த திங்கட்கிழமை ஆர்மேனியா நடத்திய பீரங்கி தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அசர்பைஜான் முன்னதாக குறிப்பிட்டது. இதற்கு முந்தைய தினம் அசர்பைஜானில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பிராந்தியத்தில் இடம்பெறும் தீவிர மோதலாக இது மாறியுள்ளது. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று அவசரமாகக் கூடியது.

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா இரு நாடுகளும் ஏற்கனவே அதிக படைகளை குவிக்க ஆரம்பித்திருப்பதோடு சில பகுதிகளில் இராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்துள்ளன. மோதலை ஆரம்பித்ததாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றன.

மூலோபாயம் கொண்ட காகசஸ் பிராந்தியத்தில் வெடித்திருக்கும் இந்த மோதலில் ஏனைய நாடுகளும் நேரடியாக தலையிடும் அச்சுறுத்தல் பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

துருக்கி ஏற்கனவே அசர்பைஜானுக்கு ஆதரவை வெளியிட்டிருப்பதோடு, ஆர்மேனியாவில் இராணுவத் தளத்தை வைத்திருக்கும் ரஷ்யா, உடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மறுபுறம் அண்டை நாடான ஈரானும் இந்த சிக்கலில் தலையிட வாய்ப்பு உள்ளது.

இந்த பிராந்தியத்தின் ஊடாகவே எண்ணெய் மற்றும் எரி வாயு உலக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும், ஒருங்கிணைந்த சோவித் ஒன்றியத்தின் பகுதிகளாகக் கடந்த காலங்களில் இருந்து வந்தன. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை தனித்தனி நாடுகளாக உருவாகின.

இதில் ஆர்மேனியாவில் கிறிஸ்துவ மதத்தினரும், எண்ணெய் வளம் மிகுந்த அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ - கரபக் என்ற சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் 1988ஆம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது. 1994ஆம் ஆண்டு இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.

போரின் முடிவில் அந்த நகோர்னோ - கரபக் பிராந்தியம் அசர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் பிரிவினைவாத ஆர்மேனிய இனத்தவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆர்மேனிய அரசு இவர்களைக் கட்டுப்படுத்துகிறது.

No comments:

Post a Comment