இஸ்ரேலில் இருந்து சவுதி வான் பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்? - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

இஸ்ரேலில் இருந்து சவுதி வான் பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம்?

இஸ்ரேலில் இருந்து சவுதி வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம் - வரலாற்று நிகழ்வு
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து சவுதி வான் பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடி விமான பயணம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உட்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தது.

இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது.

இஸ்ரேலை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உட்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல் - அரபு அமீரகம் இடையே கடந்த 14 ஆம் திகதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இஸ்ரேலை தனி நாடகவும் ஏற்றுக் கொண்டது.

ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம்தான்.

இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும், ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை அரபு அமீரகம் நேற்று ரத்து செய்தது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தலாம்.

இந்நிலையில், இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து இன்று தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் இருந்து பிரதமர் பெஞ்சமின் அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான எல் அல் விமானத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான் பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் சவுதி அரேபியா வான் பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்திற்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

விமான போக்குவரத்து இன்று நடைபெறும் என வெளியாகியுள்ள தகவல் உறுதியாகும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல் சவுதி அரேபியாவையும் இஸ்ரேலுடன் நட்புறவை மேம்படுத்த வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அந்நாட்டு தலைவர்களுடன் பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment