பூனையின் கழுத்தில் ஹெரோயின், சிம், மெமரி அட்டைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 2, 2020

பூனையின் கழுத்தில் ஹெரோயின், சிம், மெமரி அட்டைகள் மீட்பு

பூனையின் கழுத்தில் ஹெரோயின், சிம் அட்டை, மெமரி அட்டை-Small Packet of Heroin-2 SIM Card-Memory Card Found in Cat's Neck
வெலிக்கடை மெகசின் சிறைக்கு ஹெரோயின் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூனையொன்றை மீட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு முன்னால் கழுத்தில் ஏதோ சிறு பொதியொன்று கட்டப்பட்டிருந்த பூனையொன்றை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர், அதனை பரிசோதித்தபோது, அதில் 1.7 கிராம் ஹெரோயின் இருப்பது தெரியவந்துள்ளது.

மிக சூட்சுமமாக பொதி செய்யப்பட்ட குறித்த சிறிய பொதியில் 2 சிம் அட்டைகள் (SIM card) மற்றும் மெமரி அட்டை (Memory Card) ஆகியன காணப்பட்டதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனை, பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பூனை ஒன்றைப் பயன்படுத்தி இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம், பொரளை பொலிசாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கழுகொன்றை பொலிஸார் அண்மையில் மீட்டிருந்தனர். 

குறித்த கழுகு, பாதாள குழுவொன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்கா என்பவருக்குச் சொந்தமானது என பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், அதனை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு மற்றும் கொழும்பு சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் மற்றும் நூற்றுக் கணக்கான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில், சிறைச்சாலைக்கு வெளியிலிருந்து இவ்வாறான பொருட்கள் வீசப்படுவது கண்டறியப்பட்டதோடு, அது தொடர்பில் பல சந்தேகநபர்கள் கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கைதிகளுக்கு வசதிகள் மற்றும் உதவிகள் புரிந்தமை தொடர்பில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் நால்வருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதோடு, அதில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment