மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசியப்பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வர வேண்டும் - சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 8, 2020

மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசியப்பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வர வேண்டும் - சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராம்

மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாக ...
மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்கள் தேசியப்பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் பட்சத்தில் மாற்று அரசியல் பண்பாட்டின் மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட தமிழினத்தின் ஒரு பிரதிநிதியாகவே சசிகலா ரவிராஜை பார்க்கின்றேன். நேற்றையதினம் கண்ணீருடன் தனது பிள்ளைகளுடன் சசிகலா வெளியேறிய காட்சிகள் பலருடைய மனதினை பாதித்துள்ளது. அரசியல் ஆசனங்களுக்காக நடத்தப்பட்ட மிகப்பெரும் அவலத்தின் வெளிப்பாடாக சசிகலா ரவிராஜ் காணப்படுகின்றார்.

போட்டியில் தெரிவுசெய்யப்படாமல் விலத்தப்பட்டிருக்கிறார். உண்மையில் இது பலத்த விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது. சசிகலாவின் பிரதிநிதித்துவம் என்பது உண்மையில் மிக முக்கியமானது.

வடக்கிலே பெண்களினுடைய பிரதிநிதித்துவம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த மாமனிதரின் மனைவியாக துயரத்தோடு காத்திருக்கிறார். தென்மராட்சி பெரு மண்ணிற்கான பிரதிநிதித்துவம் இரண்டாவது முறையாக தவறவிடப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த சமூகத்தின் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு செல்லவிருந்த வாய்ப்பினை சகிகலா இழந்திருக்கிறார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்திருக்கக் கூடிய தேசியப்பட்டியலை சசிகலாவிற்கு வழங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தேசியப்பட்டியல் ஏற்கனவே ஒருவருக்கு பதிவுசெய்யப்பட்டு விட்டது. அந்தளவிற்கு கூட்டமைப்பிற்கு பெரிய மனது இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இந்த நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு ஒரு தேசியப்பட்டியல் இருக்கின்றது. அவர்கள் உண்மையில் மாமனிதர் ரவிராஜை கௌரவிப்பதாகவும் பாராளுமன்றில் தமிழ் பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தால் அவர்கள் தங்கள் தேசியப்பட்டியல் ஆசனத்தை சசிகலாவிற்கு வழங்க முன்வர வேண்டும்.

அவர்கள் அந்த கௌரவத்தை கொடுப்பார்களே ஆனால் முன்னணியினர் பேசிவருகின்ற அந்த மாற்று அரசியல் பண்பாட்டின் மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும். அத்தோடு தமிழ் பெண் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படும்.

கணவனை அல்லது உறவுகளை இழந்திருக்கக்கூடிய அத்தனை பெண்களினுடைய பிரதிநிதியாக அவரை முன்வைக்க முடியும். இந்த கருத்துருவாக்கம் மக்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment