ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் திகதி அறிவிப்பு இன்றி ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் திகதி அறிவிப்பு இன்றி ஒத்திவைப்பு

வில்பத்து காடழிப்பு: விசாரணைக்கு ...
(எம்.எப்.எம்.பஸீர்)

பாதுகாக்கப்பட்ட வில்பத்து சரணாலயத்தின் காட்டுப்பகுதியில், காட்டை அழித்து சட்ட விரோத கட்டுமானங்கள் மற்றும் மீள் குடியேற்றத்தை முன்னெடுத்தததாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாரு கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் திகதி அறிவிப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த ரீட் மனு தொடர்பிலான தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோரால் அறிவிக்கப்படவிருந்த நிலையிலேயே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று குறித்த நீதிபதிகள் இருவர் உள்ளடங்கிய அமர்வுகள் எவையும் இடம்பெறவில்லை. இதனால் மேன் முறையீட்டு நீதிமன்றின் 204 ஆம் இலக்க விசாரணை அறையில் நேற்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் வில்பத்து விவகார வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் தொடர்பில் எந்த அறிவித்தல்களும் நேற்று மாலை வரை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

முன்னதாக இவ்வாறு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள ரிட் மனுவில் பிரதிவாதிகளாக, வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, மன்னார் மாவட்ட செயலர், முன்னள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் 2388 ஏக்கரை அழித்ததன் ஊடாக பாரிய சூழல் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இம்மனு ஊடாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். குறித்த வனப்பகுதியை மேலும் அழித்து மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற குடியேற்றங்களைத் தடுப்பதற்கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி மஹிந்த சமயவர்தன தீர்ப்பை அறிவிக்க விருப்பம் தெரிவிக்காமையினால் மனுவை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி யசந்த கோதகொட தீர்மானித்தார்.

அதன்படியே மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் கீழ் இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இவ்வழக்கை மீள விசாரித்தது. அந்த விசாரணைகளே நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன் நேற்று தீர்ப்பு அறிவிப்பதாக இருந்தது. எனினும் நேற்று குறித்த நீதிபதிகள் குழாம் அமர்வு இடம்பெறாத நிலையில், அவ்வழக்கின் தீர்ப்பு மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மனுதாரரான சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சார்பில் சட்டத்தரணி ரவீந்ரநாத் தாபரே ஆஜரானதுடன், சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி மனோகர ஜயசிங்க ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment