மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது - சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது - சட்டமா அதிபர்

Premalal Jayasekara appeals death penalty - Ceylon Today
(எம்.மனோசித்ரா)

மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்புக்களில் கலந்துகொள்ளவும் முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 89 ஈ சரத்தின் படி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாயின் அவரின் வாக்குரிமை நீங்குவதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நீதி அமைச்சில் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி என்பதால் தற்போதைய சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கிணங்க அவரால் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவோ வாக்களிக்கவோ முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரின் இந்த நிலைப்பாடு கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கமையவே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரமேலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய நபர்கள் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிலந்த ஜயகொடி ஆகியோராவர்.

No comments:

Post a Comment