ஆறுமுகன் தொண்டமான் நினைவாக தபால்தலை - செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு வியாழேந்திரன் சம்மதம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

ஆறுமுகன் தொண்டமான் நினைவாக தபால்தலை - செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு வியாழேந்திரன் சம்மதம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தபால்தலை வெளியிடுவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கைக்கு அவர் சம்மதம் வெளியிட்டுள்ளார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஒன்பதாவது பாராளுமன்றத்தில் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாமை பெரும் கவலையளிக்கிறது. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பதானது மலையக மக்களுக்கு பெரும் சக்தியாக உள்ளது. 

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், விட்டுச் சென்ற சேவைகள் அனைத்தும் அவர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மலையக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் அதேவேளை, அதன் தலைவராக இருந்து மறைந்த ஆறுமுகன் தொண்டமான் மீதும் அளவு கடந்த நம்பிக்கையும் வைத்திருந்தனர். 

அவர் இல்லாத பாராளுமன்றம் என்பது எமக்கும் மலையக மக்களுக்கும் பெரும் மனவருத்தமான விடயமாகும். ஆனபோதிலும் அவரது பணிகள் அனைத்தும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும். 

இதேவேளை, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள எஸ்.வியாழேந்திரனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தேன்.

அதன்போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்தேன்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு எனது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அறிக்கையில் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad