சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக பேரம் பேசும் சக்தியாக மாறுவோம் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக பேரம் பேசும் சக்தியாக மாறுவோம் - முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

Tamil Diplomat Responsibilities cannot be evaded- Government has ...
ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அமையப் போகின்ற அரசாங்கத்தில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பெறுவதற்காக பேரம் பேசும் சக்தியாக மாறுவோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

புதன்கிழமை 05.08.2020 இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களித்து விட்டு அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் அவர் வாக்களித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் எந்தத் தரப்பு கூடுதல் உறுப்பினர்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்துக் கொண்டாலும் அந்தத் தரப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளை‪ வென்றெடுப்பதே எமது நோக்கமாகும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழமைபோன்று இம்முறையும் தனது வரலாற்றுத் தடத்தைப் பதித்து அமோக வெற்றி பெறும். அதிக ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைக்கும் கட்சியுடன் நாமும் பேரம்பேசி மக்களுக்கு சேவை செய்ய சித்தமாக இருக்கின்றோம்.

இத்தருணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கைகோர்த்து இருபெரும் சிறுபான்மை அணியினரும் இணைந்து ஒட்டு மொத்த சிறுபான்மையினரின் நலனுக்காக பாடுபட முடியும். இதனை நான் எனது கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக் காலத்தில் செயலில் நீரூபித்துக் காட்டியிருந்தேன்.

இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் சாத்தியப்படாதது ஒன்றுமில்லை என்று உறுதியாக நம்புபவன் நான். அந்த அடிப்படையிலேதான் எனது கிழக்கு மாகாண ஆட்சியும் முழு உலகுக்கும் முன்னுதாரணமான ஒரு நல்லாட்சியாய் அமைந்திருந்தது.

அதேபோன்ற நாடாளுமன்றத்திலும் தேசிய அரசிலும் இணக்கப்பாட்டான அரசியலைச் செய்வது மாத்திரமல்ல புரிந்துணர்வுடன் இரு சமூகங்களின் இணைந்த குரலாக உரிமைகளை அபிலாஷைகளை அதிகப்படியாக பெற்றுக் கொள்வதற்கு ஆவன செய்வோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் புரிந்துணர்வுள்ள மக்கள் பிரதிநிதிகளோடு இணைந்து நிச்சயமாக இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் சிறுபான்மைச் சமூகங்களின் உச்சபட்ச அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதில் வெற்றி காண முடியும். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்காக என்னாலான அனைத்தையும் செய்ய சித்தமாகவுள்ளேன்.” என்றார்.

No comments:

Post a Comment