கொடுங்கோல் ஆட்சி செய்ய பிரேமதாஸ யுகம் மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது - ரணில்,மைத்திரி போன்ற நிலைமை தோற்றம் பெற்றால் முரண்பாடுகளே பெறுபேறாக அமையும் : பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, August 1, 2020

கொடுங்கோல் ஆட்சி செய்ய பிரேமதாஸ யுகம் மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது - ரணில்,மைத்திரி போன்ற நிலைமை தோற்றம் பெற்றால் முரண்பாடுகளே பெறுபேறாக அமையும் : பிரதமர் மஹிந்த

இன்று வரையில் மொட்டு கட்சியின் ...
(இராஜதுரை ஹஷான்)

கொடுங்கோல் ஆட்சி செய்ய பிரேமதாஸ யுகம் மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும், பாதுகாக்கவும், நல்லிணக்கத்துடனும் வாழும் சூழல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான எமது ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆட்சிக் காலத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் அரசியலுக்கும் மாணவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை கொடூரமான செயற்பாடாக கருத வேண்டும்.

1988-99ம் ஆண்டு காலப்பகுதியில் ஒவ்வொரு பிரதேசத்திலும் 1000ற்கும் மேற்ப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 13 பாடசாலை மாணவர்களும், 53 சாதாரண நபர்களும் கடத்தப்பட்டார்கள். இவர்களில் 48 பேர் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். 

1993ம் ஆண்டு சூரியகந்தை மனித படுகொலை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தோம். இந்த சம்பவத்தில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக அறிய முடிந்தது. ஆகவே இவ்வாறான கொடிய பிரேமதாஸ யுகம் மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும், தேசிய நல்லிணக்கத்துடன் கௌரவமான முறையில் வாழும் சூழல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான எமது ஆட்சியில் உருவாக்கப்படும். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஒருபோதும் பாதிப்பினை ஏற்படுத்த மாட்டோம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சுபீட்சமான எதிர்கால கொள்கையினை செயற்படுத்த அவருடன் இணக்கமாக செயற்படும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். 

ரணில் - மைத்திரி போன்ற நிலைமை தோற்றம் பெற்றால் முரண்பாடுகளே பெறுபேறாக அமையும். ஆகவே ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த பொதுஜன பெரமுன தலைமையிலான பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

நாட்டுக்கும், கிராமத்திற்கும் சேவையாற்றும். சிறந்த ஆற்றல்மிக்கவர்களை மக்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும். 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இடம்பெற்ற அரசியல் ரீதியாக தவறுகளை மக்கள் தொடர்ந்து இடம் பெற்ற தேர்தல்களில் திருத்திக் கொண்டுள்ளார்கள். 

ஆகவே பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புதிய அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment